14 வருஷமா அட்ரஸ் இல்லாத டி.டி.வி.தினகரனை ஊருக்லி காட்டியதே இந்த புகழேந்தி தான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அம்மா சாவில் கூட அவர் கிடையாது’’ என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.  

அமமுகவில் டிடிவி. தினகரன் நடவடிக்கை பிடிக்காமல் கட்சியிலிருந்து விலகி பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.   இந்நிலையில், கோவையிலும் முக்கிய நிர்வாகிகளை டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து நீக்கினார். இந்நிலையில், அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கடந்த 6ம் தேதி நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டார். இதுகுறித்த வீடியோ சமூக இணையதளங்களில் நேற்று வேகமாக பரவியது.  இதுகுறித்து புகழேந்தி கூறுகையில், ‘’கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோவை நிர்வாகிகள் முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள் மட்டும் அல்ல. அவர்கள் கட்சிக்காக சிறை சென்றவர்கள். கட்சியில் இருந்து நீக்கியது அவர்களுக்கு மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.  

அவர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க என்ன காரணம்? அவர்கள் என்னிடத்தில் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். சசிகலாவிற்காகவே நாம் உள்ளோம். வேறு எங்கும் செல்ல வேண்டாம் என்று அவர்களிடம் ஆறுதல் கூறினேன். இது தவறா? எனக்கு தெரியாமல் இதுகுறித்த வீடியோவை எடுத்து அமமுக ஐடி.விங்கே சமூக வளைதளத்தில் வெளியிட்டது எந்த விதத்தில் நியாயம்? கஷ்டமான காலகட்டத்தில் நான் கட்சிக்காக போராடியது அனைவருக்கும் தெரியும். 

இதை கட்சி தலைமை மறுக்க முடியாது. 4 பேர் ஒரு அறையில் பேசுவதை நாடு முழுவதும் பரப்புவதற்கு காரணம் என்ன? அப்படி என்றால் எனக்கு கட்சியில்  சுதந்திரம் கிடையாதா? என்னை அசிங்கப்படுத்தவே அமமுக ஐடி.விங் செயல்படுவதாக எனக்கு கேள்வி எழுகிறது. ஒரு அறையில் பேசியதை எனக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிடுவதற்கு காரணம் என்ன? இதுபோன்று வீடியோ எடுத்தது தவறு. கட்சியை விட்டு எல்லோரும் வெளியேறிய பின்பும் அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும் என்றே அவர்களை சந்தித்தேன். சசிகலாவிற்காகவே டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். 

ஐடி.விங் என்ற பெயரில் இதுபோன்ற பதிவை போடுவது நாகரிகமற்ற செயல். இதற்கு கட்சி தலைமை பதில் சொல்ல வேண்டும். நான் சசிகலாவிற்கு வேண்டியவன் என்பதால் கட்சியில் இருந்து புறக்கணிக்கப்படுகிறேனா? பழிவாங்கப்படுகின்றேனா? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. 14 வருஷமா அட்ரஸ் இல்லாத டி.டி.வி.தினகரனை ஊருக்க காட்டியதே இந்த புகழேந்தி தான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அம்மா சாவில் கூட அவர் கிடையாது’’ எனத் தெரிவித்துள்ளார்.