வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விடாமல் செய்வதற்கான சூழ்ச்சி தான் இது. அரசு காவல்துறை மூலம் வழக்குகளை போட்டு வருகிறது என செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி சார்பில் கையெழுத்து இயக்கம் கடந்த 2-ம் தேதி தொடங்கப்பட்டது. இறுதி நாளான இன்று திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வுமான வி.செந்தில்பாலாஜி கரூர் ஜவஹர்பஜாரில் வியாபாரிகளிடம் கையெழுத்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி, "போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற புகாரில் என் பெயரோ, என் தம்பி பெயரோ இல்லாத நிலையில் இவ்வழக்கில் நீதிமன்றம் விடுவித்த நிலையில் முதல்வர், அமைச்சர் ஆகியோர் தூண்டுதலின் பேரில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நோட்டீஸ் அனுப்பாமல் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் சென்னை வீட்டிலிருந்து ரூ.1.57 லட்சம், 7 பவுன் மட்டுமே கைப்பற்றப்பட்டது.

கரூர் டெக்ஸிலிருந்து அந்நிறுவன கணக்கு வழக்கு, காசோலைகள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன. என்னை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விடாமல் செய்வதற்கான சூழ்ச்சி தான் இது. அரசு காவல்துறை மூலம் வழக்குகளை போட்டு வருகிறது. எத்தனை வழக்குகள் வந்தாலும் அவற்றை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். அமைச்சர் எல்ஜிபி பெட்ரோல் பங்க், சுக்காலியூரில் 150 ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறினேன். இதற்காக வழக்கு போடுங்கள் என்று கூறியும் வழக்கு போடவில்லை.

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முதல்வர் மற்றும் அந்த துறை அமைச்சருக்கு தொடர்பு உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என்றார்