பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய அரசு, தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து  வருகிறது. இது உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமாக கருதப்படுகிறது.  இத்திட்டத்தை வலியுறுத்தும் வகையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய  அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவினர்  கடந்த 13ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும்  பணியில் ஈடுபட்டனர். 

மேலும்  நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர்,  நடிகையும் பாஜ எம்பியுமான ஹேமமாலினி ஆகியோர் தூய்மை இந்தியா திட்டத்தின்  கீழ் நாடாளுமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை தூய்மைப்படுத்தினர்.

இந்நிலையில்,  பாஜக தொண்டர் ஒருவர், போபால் தொகுதிக்குட்பட்ட தனது பகுதி சுகாதாரமற்ற  நிலையில் இருப்பதாக அத்தொகுதியின் எம்பி.யான பிரக்யா தாக்கூரிடம் புகார்  தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய பிரக்யா, உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்பி. ஆகவில்லை.  தயவுசெய்து அதை புரிந்து கொள்ளுங்கள். நான் எந்த காரணத்திற்காக எம்பி.யாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேனோ, அதனை சரியாக செய்வேன். அதைத்தான் நாங்கள்  அப்போதும் கூறினோம், இப்பொழுதும் கூறுகிறேன். அதனையே எதிர்காலத்திலும் பின்பற்றுவோம் என கடுமையாக பேசினார்.

பிரக்யாவின் இந்த சர்ச்சைக்கு பேச்சுக்கு பல கட்சிகளில் இருந்தும் கடும்  கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜ  தலைமை அலுவலகத்துக்கு நேற்று பிரக்யாவை வரவழைத்த அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, அவரது சர்ச்சை பேச்சுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் கடும்  அதிருப்தி தெரிவித்திருப்பதாகவும், பாஜகவின் நலத்திட்டங்களையும்  கொள்கைகளையும் இழிவுப்படுத்தும் கருத்துகளை தெரிவிக்க வேண்டாமென்றும்  அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.