செங்கல்பட்டு பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களின் உயிருக்காகத்தான் நான் பயந்தேனே தவிர, நான் உயிருக்கு பயந்தவள் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர்,  ஜூலை 9 ஆம் தேதி அன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருகை தர உள்ளார். அவர் வருவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்வது குறித்து முரளிதர ராவ் ஆலோசனை வழங்கினார் என்றார். 

அமித்ஷாவின் வருகை 2019 ஆம் ஆண்டு பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு வித்திடும் என்று கூறினார். திமுக - காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த திட்டமும்வரவில்லை. ஆனால் பாஜக ஆட்சியில் எம்ய்ஸ், காவிரி மேலாண்மை வாரியம், 8 வழிச்சாலை உள்ளிட்ட பெரிய திட்டங்கள் தமிழகத்துக்கு வந்துள்ளன என்றார்.

ஆளுநரின் பயணங்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிக்கிறார். ஆளுநர் பன்வாரிலால் சட்டப்படிதான் அறிக்கை அளித்திருக்கிறார். ஆளுநர், தங்களை மிரட்டுவதாக கூறுவது தவறு. அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரங்களைத்தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். அதை எதிர்த்தால் என்ன தண்டனை வரும் என்பதைத்தான் ஆளுநர் கூறியிருக்கிறார் என்றார்.

திருவள்ளூர், திருப்பூரில் நக்சலைட்டுகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இயக்குநர் கௌதமன், ப்யூஷ் மனுஷ், மன்சூர் அலிகான், வளர்மதி பொன்றோர் எல்லாம் யார்? மக்கள் ஆதரவாளர்களா? சேலத்தை தூத்துக்குடியாக மாற்ற வேண்டும் என்ற சுயநல திட்டப்படித்தான் இவர்கள் மக்களுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள். இவர்களை கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. போராட்டங்கள் மக்களின் உயிரை பலிவாங்கக் கூடிய போராட்டமாக மாறக் கூடாது என்று கூறினார்.

நான் யாரையுமே மரியாதைக் குறைவாக பேசியதில்லை. அன்புமணி ராமதாஸ், தாம் தான் உலகிலேயே புத்திசாலிபோல் பதிவுகளையிட்டு வருகிறார். என் சுய உழைப்பினால்தான் நான் தலைவராக உருவெடுத்துள்ளேன். தேசியப் பண்பு இருப்பதால்தான் என்னால் தேசியக் கட்சியின் தலைவராக இருக்க முடிகிறது. அன்புமணி ராமதாஸ் சுகாதார துறை அமைச்சராக இருந்தும், எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் கொண்டு வரவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ஒருவருடைய மகன் என்பதால் மட்டுமே அமைச்சராவனவர் அன்புமணி. கருத்திற்கு கருத்துதான் பதிலாகும். என் தகுதியையே கேள்விக்குள்ளாக்குவது எப்படி அரசியலாகும்? நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? மன்னிப்பு கேட்க வேண்டிய அளவிற்கு நான் எதையும் தவறாக பேசியதில்லை என்றும் தமிழிசை கூறினார்.

அனைத்துக்கும் மரியாதை வேண்டும். கருத்திற்கு கருத்துதான் பதிலாகு தவிர, தகுதியை விமர்சிப்பது எவ்வாறு பதிலாகும் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கு நாகரிகமான அரசியல் தேவை. அன்புமணி ராமதாசுடன் நேரடி விவாதத்திற்கு நான் தயார்... அவர் தயாரா? அரசியலில் ஆண் - பெண் வேறுபாடு இல்லை. 

உயிரை துச்சமென நினைத்துதான் அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நான் உயிருக்கு பயந்தவள் இல்லை. செங்கல்பட்டு பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களின் உயிருக்காகத்தான் நான் பயந்தேன். தென்னை மரத்திற்கு வழங்கப்பட்டதுபோல், பனைக்கும், பாக்கிற்கும் இழப்பீடு வழங்க வேண்டும். வளர்ச்சி திட்டங்கள் வேண்டாம் என்று யாரும் கூற வேண்டாம். பாஜக மக்கள் மீது அக்கறையுள்ள கட்சி என்றும் மக்களுக்கான திட்டங்களை எதிர்ப்பவர்களை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் அப்போது கூறினார்.