கடந்த 27 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் திடீர் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். 
அதன்பின், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை  அடுத்து கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் தலைவர் கருணாநிதி. நேற்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி அவர்களின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 24 மணி நேரத்திற்கு பின் தான் அவருடைய உடல் நலத்தினைப் பற்றி கூறமுடியும் என்று தெரிவித்திருந்தனர். அதனால் தமிழகமே கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவுகளில் மூழ்கியுள்ளது.

கலைஞர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, அவருடைய தொண்டர்கள் இரவு பகல் பாராமல் அவரை ஒருமுறையேனும் பார்த்துவிடமாட்டோமா என்று  காவேரி மருத்துவமனையின் வாசலில் காத்திருக்கின்றனர். மேலும் தமிழகத்தின் வெவேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் காவேரி மருத்துவமனை நோக்கி விரைந்து வந்துகொண்டிருக்கின்றனர். மேலும் சில தொண்டர்கள் வித்தியாச தோற்றத்தில் காவிரி மருத்துவமனையை சுற்றி வளம் வந்துகொண்டிருக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரியவர் கலைஞர் ஐயாவிற்கு கைத்தடி ஒன்றை பரிசளிக்க விரும்புவதாக காவேரி மருத்துவமனையில் காத்திருந்தார். நேற்று ஒரு தொண்டர் உடல் முழுவதும் கலைஞர் கருணாநிதி குறித்த வசனங்களை எழுதி கொண்டு மருத்துவமனையில் காத்திருந்தார். இந்நிலையில், இன்று காலை கையில் வேலுடன் 'நான் தான் மர்மயோகி மண்சித்தர்' என்று கூறிக்கொண்டு ஒரு நபர் வந்தது அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும் அந்த நபர் கூறியது, "நான் நான் தான் 'மர்மயோகி மண் சித்தர்' தமிழ் தாயை (வேலில் இணைக்கப்பட்டுள்ள லிங்கம்) கலைஞர் அய்யாவுக்கு அர்ப்பணம் செய்ய காத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள ஒரே தமிழ் சித்தர் நான் தான். நான் அடிக்கடி கொல்லிமலை சென்று வருவேன். நான் மீண்டும் கொல்லிமலைக்கு செல்ல வேண்டும். அதற்க்கு முன் கலைஞர் அய்யாவை பார்க்க வேண்டும்." என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாமல் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.