மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தான் நலமாக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தகவல் தெரிவித்துள்ளார். 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். மக்கள் நல பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ.க்கள். அமைச்சர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. தற்போது நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரமும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் இப்போதுதான் எனது கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறியே இருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் சமீப நாட்களில் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவ விதிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாம் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கார்த்தி சிதம்பரம் எம்.பி. கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார். நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.