I am also acquitted like raja and kanimozhi said lalu prasad

2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதைப் போலவே கால்நடைத் தீவன ஊழல் வழக்கிலிருந்து நானும் விடுதலை செய்யப்படுவேன் என பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத்துக்கு எதிராக தொடரப்பட்ட கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 2வது வழக்கில் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.

பீகார் முதல்வராக லாலு பிரசாத் பதவிவகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 1994-95-ல் சைபாசா கருவூலத்திலிருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் மூலம் ரூ.37.7 கோடி பணத்தை லாலு எடுத்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக லாலு பிரசாத் மீது சிபிஐ மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்தன. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் லாலு ஜாமீனில் வெளிவந்தார்.

இதனிடையே ஒரே புகாரின் கீழ் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி லாலு பிரசாத் தரப்பில், ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

குற்ற நடைமுறைச் சட்டத்தின் படி, ஒரே குற்றத்திற்காக ஒருவர் மீது இருமுறை குற்றம்சாட்ட முடியாது என்று கூறி லாலு மீதான விசாரணையை நிறுத்துமாறு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், அரசு கருவூலங்களிலிருந்து வெவ்வேறு காலக்கட்டங்களில் பணம் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் இரண்டு முறையும் நிதி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களும் பயனடைந்த நபர்களும் வேறு வேறு என சிபிஐ தெரிவித்தது.

இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், அரசு கருவூலத்திலிருந்து பணம் எடுத்தது மற்றும் ஆவணங்களில் முறைகேடு செய்தது தொடர்பாக லாலு உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. 

அதன்படி, இந்த வழக்கை விசாரித்து வந்த ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இன்று தீர்ப்பளிக்க உள்ளது. 

இன்று தீர்ப்பு வர உள்ள நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள லாலு பிரசாத், அரசியல் காழ்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு இது. 2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதைப் போல, நானும் விடுதலை செய்யப்படுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.