முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், கடந்த 1938-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகையை, "அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனம் நடத்தி வந்தது. நிர்வாகச் சீர்கேடு, விற்பனைச் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டது.

இந்தப் பத்திரிகையை மேம்படுத்த ரூ.90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம் காட்டி, "அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருக்கும் "யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ. 2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை "யங் இந்தியா' நிறுவனம் அபகரித்துவிட்டதாகவும், 2011, 2012-ஆம் ஆண்டுகளில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். 

இந்த வழக்கு சமீபத்தில் பாட்டியாலா மாளிகையில் இருந்து புதியதாக கட்டப்பட்ட ரூஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி சமர் விஷால் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சுப்பிரமணியன் சுவாமியை, சோனியா மற்றும் ராகுல் காந்தி தரப்பு வழக்குரைஞர் ஆர்.எஸ் சீமா குறுக்கு விசாரணை செய்தார். நீதிபதி சமர் விஷால் முன்னிலையில், வழக்கு தொடர்பாக பல கேள்விகளை சீமா, சுப்பிரமணியன் சுவாமியிடம் எழுப்பினார்.

வழக்கு விசாரணையின் போது சீமா, இந்தியில் பேசினார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, “ஆங்கிலத்தில் பேசுங்கள்; நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலமே” என்று கூறினார். உடனே குறுக்கிட்ட நீதிபதி சமர் விஷால், "இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டும் நீதிமன்றத்தின் மொழிகள். இந்தி தேசிய மொழி" என்று கூறினார்.

இதனை அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் சுப்பிரமணியன் சுவாமியிடம் சீமா இந்தியில் கேள்வி எழுப்பினார். மீண்டும் ஆட்சேபம் தெரிவித்த சுவாமி, "தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுங்கள். நான் ஒரு தமிழன் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆங்கிலம் நீதிமன்றத்தின் மொழி"  என்றார். இதனை அடுத்து, சீமா ஆங்கிலத்தில் கேள்விகளை எழுப்பினார். இந்த நிகழ்வுகளால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.