ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஓவைசியின் ஆதரவு டிஆர்எஸ் கட்சிக்கு தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்போது ஓவைசி தான் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு டிசம்பர்1ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 10, ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சி 51 இடங்களில் போட்டியிட்டது. சட்டப்பேரவை தேர்தலை விட ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுவதில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வந்தனர். குறிப்பாக பாஜக தலைவர் உள்துறை அமைச்சர் தீவிரம் காட்டினார்.

இந்த தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் நேற்று காலை  எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் தபால் வாக்குகள் எண்ணும் போது பாஜக கட்சி அதிக இடங்ககளில் முன்னிலை வகித்தது. இதனால் பாஜக  தலைவர்களும், அந்தக்கட்சியை சேர்ந்த தொண்டர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், போக போக  தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. 

மொத்தம் உள்ள 150 வார்டுகளில் 149 வார்டுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) 55 இடங்களிலும், பாஜக 48 வார்டுகளிலும், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற டிஆர்எஸ் கட்சி இந்த முறை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த முறை 4 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இந்த முறை கூடுதலாக 44 வார்டுகளை கைப்பற்றியிருக்கிறது. 

டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும், மேயர் பதவியை பெற முடியாத நிலை உள்ளது. மேயர் பதவியை பெற குறைந்தபட்சம் 67 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஏஐஎம்ஐஎம் கட்சி ஆதரவு அளித்தால் மட்டுமே டிஆர்எஸ் மேயர் பதவியை பெற முடியும். கடந்த தேர்தலைப் போன்றே 44 வார்டுகளில் வெற்ற பெற்ற அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, மேயர் பதவியை தீர்மானிக்கும் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.