நினைத்த நொடியில் டெல்லிக்கு பயணம், பல லட்சம் செலவில் மத்திய அரசின சலுகைகள், மீடியாக்களின் வெளிச்ச மழை!...என்று சத்தியபாமாவின் வாழ்க்கையை பார்க்கும்போது சகலருக்கும் பொறாமையாக இருக்கலாம். ஆனால் காதலித்து கரம்பிடித்த கணவன் செய்யும் அசிங்கமான காரியங்களால் அழுது கரைகிறார் உள்ளுக்குள்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் சத்தியபாமா. கடந்த வியாழன்று இரவில் இவரது கணவர் வாசு இவரையும், இவர் தம்பியையும் அரிவாளால் வெட்ட முயன்றதான புகாரில் கைதாகி இருக்கிறார். இந்த மன கஷ்டத்துக்கு இடையில்தான் மறுநாள் காலையில் மகனுக்கு நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்திருக்கிறார் எம்.பி. ஆனால் விழாவுக்கு வந்தவர்களின் விசாரிப்பும்! ஏளனப் பார்வையும் எம்.பி.யை பிய்த்து தின்றிருக்கிறது! என்பதே நிதர்சனம்.

சத்தியபாமாவும், வாசுவும் இருபத்து ஏழு வருடங்களுக்கு முன் காதலித்துதான் திருமணம் செய்தார்கள். அடுத்த சில வருடங்களில் அ.தி.மு.க.வில் மளமளவென பல பதவிகளை அடைந்து வளர்ந்தார் சத்தியபாமா. மனைவிக்கு நிறைய பதவிகள் கிடைக்கணும், நிறைய சம்பாதிக்கணும், குடும்பம் வளரணும் என்று வாசு ஆசைப்பட்டாலும் கூட அவர் தன் கைக்கு அடக்கமாகவே இருக்கணும் என்று நினைத்தார்.

கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளராக இருந்த வாசு, தோப்பு வெங்கடாசலத்தின் நட்பில் சத்தியபாமா இருந்ததை விரும்பவில்லை. தோப்புவுடன் பாமா அரசியல் நிகழ்ச்சிகளுக்கு சென்றாலே கூப்பாடு போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இன்னும் சில நிர்வாகிகளுடன் இவர் பேசினாலே இருவரையும் இணைத்து அசிங்கம் அசிங்கமாய் பரப்புரை செய்தார்.

சத்தியபாமா எம்.பி.யானதும் இருவருக்கும் இடையிலான விரிசல் பெரிதானது. எம்.பி. எட்டாத உயரத்துக்கு சென்றுவிட, டென்ஷனான வாசு தனது மன அரிப்பை தீர்த்துக் கொள்ள வாட்ஸ் அப்பை பயன்படுத்தினார். தன் மனைவியுடன் போனில் சண்டை போட்டு, அந்த ரெக்கார்டை வாட்ஸ் அப்பில் பரவ செய்தார்.  எம்.பி. கண்டுகொள்ளவில்லை.

இதைவிட மோசமாய் அடுத்த காரியத்தை கையிலெடுத்தார். அதாவது தன் பேஸ்புக்கில் மனைவியின் படங்களை போட்டு மோசமான வர்ணனைகளை செய்தார். எம்.பி.யின் நடத்தையில் துவங்கி பல விஷயங்களை அபத்தமாக பதிவு செய்தார்.

அதிலும் கடந்த 27-ம் தேதியன்று எம்.பி.யை பற்றி இவர் செய்திருக்கும் எந்த புருஷனும் தன் மனைவி மீது, அதிலும் பொது வெளியில் வைக்காத விமர்சனமாகும். அதற்கு அடுத்த நாள், சசிகலா புஷ்பா போல் சத்தியபாமாவும் மறுமணம் செய்யப்போகிறார், ஆனால் இது அவருக்கு ஏழாவது திருமணம்! என்று போட்டுள்ளார். இந்த நிலையில்தான் எம்.பி.யின் வீட்டுக்கு அரிவாளோடு போயி ரகளை செய்து, கைதாகியுள்ளார்.

இவ்வளவு கஷ்டங்களையும், குரோதங்களையும், அசிங்கங்களையும் தாங்கிக் கொண்டு மன தைரியத்துடன் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வாழ்க்கையை முன்னெடுத்து செல்கிறார் சத்தியபாமா. எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்? என்று கேட்டால்....’இந்தியாவின் இரும்பு மனுஷியான  எங்கள் முதல்வரம்மா கொடுத்த தைரியம்தான்’ என்கிறார்.