காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஏப்ரல் 2 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில் தற்போது 3 ஆம் தேதிக்கு போராட்ட தேதியை மாற்றி அக்கட்சி அறிவித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  70-வது பிறந்த நாளையொட்டி மதுரையில்   120  ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

விழாவில்  முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திருமண விழாவை நடத்தி வைத்தனர்.

விழாவில்  ஓபிஎஸ் பேசும்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி  ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த  உண்ணாவிரதப் போராட்டம் 3 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

புதுச்சேரியிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.