சென்னை ஐஐடியில் தமிழ் பண்பாடு வளர்த்த போது எடுத்த படம் என்று ஆணும் பெண்ணும் உதட்டோடு உதடாக முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சில தினங்களுக்கு முன்பு நூல் வெளியீட்டு விழாவின் போது ஆளுநர், காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் இருந்தது பெரும் சர்ச்சை வெடித்தது. 

இதையடுத்து சென்னை ஐஐடியில் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில், தமிழ்தாய் வாழ்த்து பாடாமல் சமஸ்கிருத மொழியில் பாடல் பாடப்பட்டது.

தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காத போக்கு தொடர்ந்து நடந்து வருவதாக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டினர். 

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படாததற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார். வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இதற்கு பாஜக மாநிலச் செயலாளர் ஹெச்.ராஜா, வைகோவை ஒருமையில் திட்டினார். இந்நிலையில், தற்போது, தமிழ்தாய் வாழ்த்து சம்பவம் குறித்து ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். 

அதில் ஆணும் பெண்ணும் உதட்டோடு உதடாக முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, வைகோ, ஸ்டாலின் கவனத்திற்கு: சென்னை IIT ல் தமிழ் பண்பாடு வளர்த்த போது என குறிப்பிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.