பாஜக தேசிய செயலாளரான ஹெச்.ராஜா வாயை திறந்தால் யாராவது வறுபடப்போவது உறுதி. இப்போது மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது திமுகவினரின் தன்மானத்தை சீண்டிப்பார்த்திருக்கிறது.

 

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, ‘’ஆர்.கே.நகர் தேர்தலைப் போல திருவாரூரிலும் மூன்றாமிடத்துக்குச் சென்றுவிடுவோம் என்கிற பயத்தால், தி.மு.க., தேர்தலைத் தள்ளிவைக்க அவர்களது கூட்டணிக் கட்சிமூலம் முயன்று வெற்றி பெற்றுள்ளார். தி.மு.கவை சுயமாகச் சிந்தித்து ஸ்டாலின் வழி நடத்தவில்லை. தி.மு.க-வை பிரிவினைவாத தீய சக்திகள் வழிநடத்துகிறதோ என்று தோன்றுகிறது.

இலங்கையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்படக் காரணமாக இருந்த சோனியா காந்தியை, கருணாநிதி சிலையைத் திறக்க ஸ்டாலின் அழைத்து வந்துள்ளார். தி.மு.க, சுய சிந்தனையோடு தன்னை வழிநடத்தும் சூழல் தற்போது இல்லை.

கேரளா சபரிமலை பிரச்னையில், வேண்டுமென்றே மிக மோசமாக பினராயி விஜயன் தலைமையிலான அரசு செயல்பட்டுவருகிறது. தமிழகத்தில் இறை நம்பிக்கையுள்ளவர்கள், ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள், மார்க்சிஸ்ட் உடன் உறவு வைத்துள்ள தி.மு.க-வை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.