தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர்கள்  மீது திணிக்கப்பட்டதே திராவிடம் என்றும்  தமிழை அழிப்பதற்காகத்தான் திராவிடம் என்ற சொல்லை  பெரியார் கொண்டு வந்தார் என்றும் கூறி எச்.ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக தனது முகநூலில் கருத்து தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை போல தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என தெரிவித்தார்.

எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது. ராஜாவை கைது செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். திமுக, அதிமுக, காங்கிரஸ் , மக்கள் நீதி மய்யம், இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் ராஜாவைக் கண்டித்து வருகின்றனர்.

இதையடுத்து தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக எச்.ராஜா நேற்று பேட்டியளித்தார். தனது அட்மின்தான் இந்த கருத்தை பதிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்  இன்று ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா பேசினார்.

அப்போது பேஸ்புக் பதிவில் இருந்து நீக்கிய கருத்துக்கு கருத்து சொல்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறினார். தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர்கள்  மீது திணிக்கப்பட்டதே திராவிடம் என்றும்  தமிழை அழிப்பதற்காகத்தான் திராவிடம் என்ற சொல்லை  பெரியார் கொண்டு வந்தார் என்றும் தெரிவித்தார்.

தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என பேசியவர் ஈ.வெ.ரா. என்றும்  அவர் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறது. இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சென்றதால் தான் தன்னை வசைபாடுகிறார்கள் எனவும் ராஜா  தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.