இன்னும் சில நாட்களில் சசிகலா விடுதலையாக உள்ள நிலையில் அவரது அவருகை அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதால் அவரை அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 3,500 பேர் பங்கேற்க உள்ளனர்.  குறிப்பாக கொரோனா தாக்கம் இருப்பதால் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த பொதுக்குழுவில் சில விவகாரங்களுக்குக் கடைசி நேரத்தில் உயிர்கொடுக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்கிறார்கள். கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, பின்னர் சிறைக்கு சென்றதால் பொதுக்குழுவால் பதவி நீக்கப்பட்ட சசிகலா இந்த மாதம் 27ம் தேதி விடுதலையாக உள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் சசிகலா, தீவிர அரசியலில் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது. அப்போது, அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதை எடப்பாடி நன்றாக உணர்ந்துள்ளார்.

 

இதற்கு தற்போது அதிமுகவில் உள்ள சில அமைச்சர்கள், முன்னணி தலைவர்கள் கூட ஆதரவு அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக கட்சியில் சசிகலாவை முழுமையாக வர விடாமல் தடுப்பது, அவரை கட்டுப்படுத்துவது குறித்தும் இன்று நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதுவரை சசிகலாவை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து முறைப்படி நீக்கவில்லை. அவரது உறுப்பினர் கார்டு புதுப்பிக்கவிடாமல் இருப்பதால், அவர் கட்சியில் இல்லை என்று எடப்பாடி தரப்பு சப்பைக் கட்டுக் கட்டினாலும் ,கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக நீக்காத வரை அதிமுகவில் சசிகலாவின் பங்கு இருந்துகொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.