இந்தப்பணப் பரிவர்த்தனை 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

இந்த காலக்கட்டத்தில் அவர் பங்குதாரராக இருந்த நிறுவனங்கள் தொடர்பான வருமான வரி அறிக்கையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் 2016 நவம்பரில் சிகிச்சை பெற்றுவந்தபோது பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டது. பண மதிப்பிழப்பு நேரத்தில் ஏராளமான சொத்துக்களை சசிகலா வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா வீட்டில் 2017 நவம்பர் 9ம் தேதி வருமான வரி சோதனை நடத்தப்பட்டபோது அங்கு சில புகைப்படங்களுடன் கூடிய கையால் எழுதப்பட்ட 2 தாள்கள் கிடைத்தன. அவற்றில், சென்னையின் பிரபலமான வணிக நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் தொகை விபரங்கள் இருந்தன.

அந்த காகிதத்தை செல்போனில் படமெடுத்துவிட்டு அப்படியே விட்டுவிட்டுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்வதற்கு முன்பு கிருஷ்ணபிரியா வீட்டில் சசிகலா தங்கியிருந்தபோது இந்த பரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது. அனைத்து தாள்களையும், கவர்களையும் அழித்த நிலையில் இரண்டு தாள்கள் மட்டும் வருமான வரித்துறையிடம் சிக்கியது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை நடத்திய விசாரணையில், அந்த தாள்களில், செந்தில் என்பவர் எழுதியது தெரியவந்தது. அவரது வாக்குமூலத்தின்படி அந்த தாள்களில் உள்ளவை சசிகலா பண மதிப்பிழப்பு நேரத்தில் வாங்கிய ரூ1.674.50 கோடி சொத்துக்களின் விபரங்கள் என்று தெரியவந்தது. பான்ஜின் பான்ஹெர் நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமாக புதுச்சேரியில் லட்சுமி ஜூவல்லரி உள்ளது. மேலும் இவருக்கு சொந்தமாக புதுச்சேரியில் ஓசேன் ஸ்பிரே என்ற பெயரில் ரிசார்ட்டும் இருந்தது.

அந்த ரிசார்ட்டை சசிகலா, அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உதவியாளர் குமார் மூலம் ரூ168 கோடிக்கு பேரம் பேசி உள்ளார். இதில் ரூ148 கோடி செல்லாத 500, 1000 நோட்டுகளாக கொடுக்கப்பட்டது. இந்த ரூ148 கோடியில் குமாருக்கு புரோக்கர் கமிஷன் ரூ12 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரூ148 கோடியும் 2016 நவம்பர் 22ம் தேதி இரவு 10.30 மணியளவில் 3 டாடா ஏஸ்(குட்டி யானை) வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனையின் போது சசிகலாவின் வக்கீல் செந்தில் என்பவரும் உடன் இருந்துள்ளார். இதுகுறித்து ரிசார்ட்டின் உரிமையாளர் நவீன் பாலாஜி அளித்த வாக்குமூலத்தில், எனக்கு 2016ம், ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லை. இதனால், ரூ100 கோடிக்கு எனக்கு நஷ்டம் ஏற்பட்டதால், ரிசார்ட்டை விற்று நகைக்கடை தொழிலில் கவனம் செலுத்தும்படி குடும்பத்தினர் கூறினார்கள்.

இதனால், ரிசார்ட்டை விற்க அமைச்சர் எம்.பி சம்பத்தின் பி.ஏ. குமார் உதவியை நாடினேன். அவர் சசிகலா வக்கீல் செந்திலை அறிமுகம் செய்து வைத்தார். அவர் ரூ168 கோடிக்கு பேரம் பேசி ரிசார்ட்டை முடித்தார் என கூறி உள்ளார். அதேபோல் மார்க் நிறுவன உரிமையாளர் ராமகிருஷ்ண ரெட்டி தனது நிறுவனத்தின் பங்கை விற்க முயன்றார். அப்போது அவரிடம் சசிகலா தரப்பு ரூ115 கோடிக்கு பேரம் பேசியது. இதில் பல்வேறு புரோக்கர்களுக்கு கமிஷனாக வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ105 கோடியில் ரூ6 கோடி ராமகிருஷ்ண ரெட்டி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மீதமுள்ள பணத்தை 7 பேரின் வங்கி கணக்கில் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. முதலில் சசிகலாவுக்கு சொத்துக்களை விற்கவும், செல்லாத நோட்டுக்களை வாங்கவும் ராமகிருஷ்ணரெட்டி மறுத்துள்ளார். பின்னர், அவர் நடத்தி வரும் மற்ற தொழில்களை பாதுகாக்கவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காகவும் அவர் சொத்தை விற்க ஒப்பு கொண்டார்.

அதேபோல், பிரபாத் குரூப் நிறுவனங்களின் இயக்குனர் சிவகன் பட்டேலுக்கு சொந்தமான தூத்துக்குடியில் இருந்த 137 ஏக்கர் யார்டு ரூ200 கோடிக்கும், தேனியில் இருந்த 1897 ஏக்கர் எஸ்டேட் ரூ100 கோடிக்கும் அதே காலகட்டத்தில் வாங்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணூரில் உள்ள 16.6 ஏக்கர் யார்டு, ரூ60 கோடிக்கும், காஞ்சிபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலை ரூ.450 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலையை ரூ386 கோடிக்கும், மேற்கண்ட மற்ற சொத்துகளை வாங்க பேரம் பேசப்பட்டது. 2016 நவம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் சர்க்கரை ஆலைக்கு ரூ286 கோடி செல்லாத நோட்டுகளை வாங்க உரிமையாளர் ஒப்பு கொண்டு உள்ளார். மீதமுள்ள ரூ164 கோடி செல்லாத நோட்டுகள் டிச.3 முதல் 23ம் வரை படிப்படியாக கைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவையில் உள்ள செந்தில் என்ற பேப்பர் நிறுவனம் ரூ600 கோடிக்கு வாங்கப்பட்டது. இதில் ரூ400 கோடி செல்லாத நோட்டுகளாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரூ400 கோடியும் ஒரு பெட்டிக்கு ஒரு கோடி வீதம், ரூ400 அட்டை பெட்டிகளில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மூலம் டிசம்பர் 23ம் தேதி பரிவர்த்தனை செய்துள்ளனர். அதேபோல் சென்னையில் கங்கா பவுண்டேசன் இயக்குனர் செந்தில் குமாருக்கு சொந்தமாக ஸ்பெக்ட்ரம் மால் இருந்தது. இதை ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் மூலம் இளவரசி மகன் விவேக், ரூ190 கோடிக்கு பேரம் பேசினார். இதில் ரூ130 கோடி செல்லாத நோட்டுகளாக கொடுக்கப்பட்டது. முதலில் ஸ்பெக்ட்ரம் மால் சசிகலா தரப்புக்கு விற்க உரிமையாளர் முன்வரவில்லை. பின்னர் மிரட்டும் விதமாக பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் மாலில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின் அந்த மாலை விற்க உரிமையாளர் முன்வந்துள்ளார்.

மதுரையில் மிலான் என்ற பெயரில் டெக்ஸ்டைல் வைத்திருப்பவர் அமர்லாஜ் ஓரா. இவருக்கு மதுரை கே.கே.நகரில் மில்லியம் மால் இருந்தது. 2014-15 காலகட்டத்தில் இந்த மாலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அதை விற்க முடிவு செய்த உரிமையாளர் அமர்லாஜ் ஓரா, இதற்காக உள்ளூரை சேர்ந்த ஒரு கான்ட்ராக்டரை அணுகினார். பின்னர் அவரது ஏற்பாட்டில் சசிகலா வக்கீல் இளங்கோ மூலம் நவம்பர் 27ம் தேதி ரூ57 கோடிக்கு மால் பேரம் பேசப்பட்டது. இதில் ரூ.30 கோடி செல்லாத நோட்டுகளாக கொடுக்கப்பட்டது. 

கடந்தாண்டு டிசம்பர் 13, 14 தேதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறைக்கு சென்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். ஆனால் வருமானவரித்துறையினர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தனக்கு எதுவும் தெரியாது என்றே சசிகலா பதில் அளித்துள்ளார் என வருமானவரித்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நேரத்தில் ரிசார்ட், ஷாப்பிங் மால், எஸ்டேட், சர்க்கரை ஆலை, பேப்பர் ஆலை என பல நிறுவனங்களை சசிகலா மிரட்டி வாங்கி குவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.