how much money captured in rk nagar constituency explained officer

சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டதில் இருந்து, தொகுதியில் கண்காணிப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீஸாரும், கண்காணிப்பில் தேர்தல் அதிகாரிகளும் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். 

இருப்பினும், தொகுதியில் பணப் பட்டுவாடா நடக்கிறது என்று பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. இந்தத் தேர்தல் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தால் மிக முக்கியமானதாகக் கருதப் படுகிறது. அதிமுக., இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுத்து, அதில் போட்டியிடுகிறது. பொதுவாக, கட்சித் தலைவர் அல்லது பொறுப்பில் உள்ளவர் இறந்து போனால் ஏற்படும் அனுதாப அலையில் கட்சிக்கு வாக்குகள் அதிகம் விழும். அதுபோல், ஜெயலலிதா ஆன்மாவை முன்வைத்து செய்யப்படும் பிரசாரத்தால் அதிமுக.,வுக்கு இந்த முறை மக்களின் அனுதாப ஓட்டுகள் விழுமா என்பதை ஆர்.கே.நகர் தேர்தல் காட்டித் தரும். அதைவிட, இரட்டை இலையை வெற்றி பெறச் செய்தாக வேண்டிய கட்டாயம், மதுசூதனனுக்கும் ஆளும் தரப்புக்கும் உள்ளது. 

திமுக., இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில், பலமான கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., என ஒரு பட்டாளமே கூட்டணியில் இருக்க, இதில் எந்த விதத்திலும் தோற்றுவிடக் கூடாது என கூடுதல் மும்முரத்துடன் களத்தில் வேலை செய்கிறது. 

டிடிவி தினகரனோ, சவால் விட்டு வேலை செய்கிறார். குக்கரை வெற்றி பெறச் செய்தே தீருவேன் என்று அவரது ஆதரவாளர்களின் தயவில் நெருக்கடிகளின் மத்தியில் இயங்குகிறார். நாம் தமிழர் கட்சி தனக்கென உள்ள ஓட்டு வங்கியைக் காட்ட வேலை செய்து இயங்குகிறது. பாஜக.,வுக்கும் கூட ஒரு நோக்கம் இருக்கிறது. அது, தாங்கள்தான் அதிமுக.,வை இயக்குவதாக பரப்பப் படும் வதந்திகளை மறுத்து, அப்படி இல்லை என்று காட்டுவதற்காகவே தேர்தலில் நிற்கிறார்கள். 

இப்படி பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒவ்வொரு கட்சியினரும் இருப்பதால், தொகுதியில் மீண்டும் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று புகார் கூறியுள்ளது பாஜக. இன்று தமிழிசை சௌந்தர்ராஜனும் அக் கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜனும் சாலைமறியலே செய்து பார்த்துவிட்டார்கள். 

இந்நிலையில், இன்று சென்னை தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஆர்.கே. நகரில் தேர்தல் அறிவிப்பிற்குப் பின் இதுவரை ரூ.3.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 97 புகார்களில் 88 ல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரசாரத்திற்காக 32 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 30 வாகனங்களுக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆக, எப்படியோ மீண்டும் பணப்பட்டுவாடா. மீண்டும் புகார். மீண்டும் தேர்தல் ஆணைய நடவடிக்கை. மீண்டும் ஒரு சோதனை. மீண்டும் தேர்தல் ரத்து என்பது வரை செல்லாமல் இருந்தால் சரிதான்..!