இன்று (28.11.2020)  தமிழக முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதன் முழுவிவரம் பின் வருமாறு: 

நிவர் புயலால் தமிழகத்தில் பெரும் பொருட்சேதமோ, பெரும் உயிர் சேதமோ ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. சிறப்பான முறையில் நடவடிக்கைகள் எடுக்க உதவியாக இருந்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றேன். சரியான முறையில், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த காரணத்தினால்தான், இன்றைக்கு தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கீடு செய்து பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும், இதுதவிர, பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். அதேபோல, இந்தப் புயலால் உயிரிழந்த குடும்பத்திற்கும் அரசு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புயலால் கால்நடைச் செல்வங்கள் இறந்திருக்கின்றன, அதற்கும் உரிய இழப்பீட்டுத் தொகை உரியவர்களுக்கு வழங்கப்படும். 

அதேபோல், கொரோனா வைரஸ் தடுப்புப் பணி குறித்தும், மாண்புமிகு அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்குவதற்கு எனது தலைமையில், 12 முறை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆய்வுக் கூட்டங்கள் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றன. அதேபோல, 10 முறை மருத்துவ வல்லுநர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தலைமைச் செயலாளர் அவர்களுடைய தலைமையில் 13 முறை மாவட்ட ஆட்சித் தலைவர் களுடைய ஆலோசனைக் கூட்டங்கள் காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது. 

இவ்வாறு ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்ற ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து, மாவட்ட நிர்வாகமும் அதனை பின்பற்றியதன் காரணமாக, கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அதேபோல, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களை அரசு கவனமாக பரிசீலித்து, தேவையான தளர்வுகளுடன் பொது முடக்கம் மிகவும் கவனமாகவும், பாதுகாப் பாகவும் அமல்படுத்தப்பட்டது. கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மாண்புமிகு அம்மாவின் அரசால் தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை அரசு செலவிட்ட தொகை ரூபாய் 7,525.71 கோடியாகும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களைக் கண்டறிய மருத்துவம் சார்ந்த செலவினம் 1,983 கோடி ரூபாயும், நிவாரணம் சார்ந்த செலவினம் 5,389 கோடி ரூபாயும் ஆகும். 

மாநில அளவில் கோவிட் மருத்துவமனைகளிலும், கோவிட் சிறப்பு மையங்களிலும் 1,41,527 படுக்கைகளும், இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 34,714 படுக்கைகளும் ICU வசதி கொண்ட 7,697 படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

அதேபோல் தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 Mini Clinic துவங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் Mini Clinic தொடங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக தமிழகத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை கேட்டறிந்ததோடு, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த முறையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது என்றும் பாராட்டினார். அதுமட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது என்ற செய்தியையும் தெரிவித்தார். அதற்காக மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

அம்மாவுடைய அரசை பொறுத்தவரைக்கும், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக நாம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இன்றைக்கு தொற்று பரவல் படிப்படியாக குறைந்து, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்றோம். இப்பொழுது 1500 நபர்களுக்கும் குறைவாக நோய் தொற்று ஏற்பட்டவர்களுடைய நிலையை நாம் பார்க்கின்றோம். இறப்பவர்களுடைய சதவிகிதம் மிக மிக குறைவாக இருக்கின்றது. ஆக, இப்படி மாண்புமிகு அம்மாவுடைய அரசு எடுத்த நடவடிக்கைக்கு பக்கபலமாக விளங்கிய அனைத்து அரசு உயர் அலுவலர்களுக்கும், அதற்கு ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து, உரையை நிறைவு செய்கின்றேன். இவ்வாறு அவர் உரையாற்றினார்.