2109 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்  நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கவுள்ளது, இதனிடையே தேர்தல் பணிகளை காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தொடங்கியுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த கூட்டணியில் மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் அந்த கட்சிகளுக்குள் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை எழுப்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை இடம், காங்கிரஸ் தலைவர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய  வைகோ, ‘திமுக கூட்டணியில் நமக்கு ஒரு சீட்டுதான் என்று பத்திரிகைகள் எழுதுகிறார்கள். நல்ல வேளை அரை சீட்டுதான் என்று எழுதவில்லை என நகைச்சுவையாக குறிப்பிட்டார். . அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அந்த செய்திகளை நம்ப வேண்டாம். திமுகவில் யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஸ்டாலின் என்னோடு சுமுகமாக இருக்கிறார் என வைகோ தெரிவித்தார்..

கட்சிக்கான அங்கீகாரம் உள்ளிட்ட பல விஷயங்களை வைத்துப் பார்த்தால் நாம் இரண்டு சீட்டுகளாவது ஜெயிக்க வேண்டும். அதற்காகத்தான் நான் திமுகவோடு பேசிக் கொண்டிருக்கிறேன். எத்தனை கேட்கிறோம் என்பதல்ல முக்கியம், எத்தனை கிடைக்கும் என்று பார்த்தால் இரண்டு சீட் நமக்கு நிச்சயம்’ கிடைக்கும் என்று வைகோ தெரிவித்தார்.