பொண்ணே பார்க்கலை ஆனால் அதுக்குள்ளே கல்யாணம் முடிஞ்சு, வளைகாப்பு நடத்தி, பெத்த குழந்தைக்கு பேரும் வெச்ச கதையாக போயிட்டிருக்குது தி.மு.க.வில் பிரஷாந்த் கிஷோரின் நடவடிக்கைகள்! என்கிறார்கள் விபரமறிந்தோர். ஆம்! தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ அரசியல் ஆலோசகராக களமிறங்கியிருக்கிறார் ஐபேக்! நிறுவனத்தின் பிரஷாந்த் கிஷோர். 
ஆட்சியை பிடிக்க வேண்டுமானால், நான் சொல்வதை செய்யுங்கள்! என்று ஸ்டாலினுக்கு கட்டளையிட்டுள்ளார் அவர். கிஷோரின் ஆர்டரின் படியே மேற்கு தமிழகத்தில் சில நிர்வாகிகளுக்கு கல்தா கொடுத்தாராம் ஸ்டாலின்.

அதேபோல் உட்கட்சி தேர்தல் அறிவிப்பு, சில இடங்களில் மாவட்டங்கள் பிரிப்பு என எல்லாமே அவரது உத்தரவின் பேரில்தான் நடந்தன. இந்த நிலையில், இப்போது புதிதாக ஒரு விஷயம் லீக் ஆகியுள்ளது. இது உண்மையா அல்லது அணுமானமா என தெரியவில்லை. ஆனால் பிரபல வாரம் இருமுறை அரசியல் வார இதழ்  ஒன்று இது குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில்தான் இது பற்றிய சில தகவல்கள் உள்ளன. அதாவது, தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள கட்சிகளில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்க வேண்டும்? என்று பிரஷாந்த் ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்துள்ளாராம்.

அதன் படி.... ’காங்கிரஸுக்கு அதிகபட்சம் 25 தொகுதிகள் மட்டுமே! இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஆறு தொகுதிகள்! விடுதலை சிறுத்தைகளுக்கு  நான்கு முதல் ஆறு தொகுதிகள்! ம.தி.மு.க.வுக்கும் ஆறு தொகுதிகளே! முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு தலா இரு தொகுதிகள்! இது போக தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளப்படும் சில உதிரிக்கட்சிகளுக்கு தலா ஒரு சீட். இப்படியாக அதிகபட்சம் அறுபது தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துவிட்டு, இருபது சீட்களை ரிசர்வ் செய்து வைத்துள்ளார்களாம். அது யாருக்கு தெரியுமா? 

நிச்சயம் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி, தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வரும்! அதற்குத்தான் அந்த இருபது. 
ஆக மீதியிருக்கும் 154 தொகுதிகளில் தி.மு.க. நிற்க வேண்டும்! இதுதான் பிரஷாந்த் கிஷோரின் உத்தரவு.” என்றிருக்கிறது.. 
ஓ! அவரே சொல்லிட்டாரா! அப்புறம் என்ன, நின்னுட வேண்டியதான்.