விவசாயிகளுக்கு அதரவாக திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், திமுக எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும் ஆட்சியை பிடிக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு சவால் விடுத்துள்ளார்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 34 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இதுவரை மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தை பொருட்படுத்தவே இல்லை.

விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சி கூட்டத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று கூட்டினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், கொங்கு நாடு ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி ஜவஹீருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் காதர் மொய்தீன், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகும்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு காரணமே திமுகதான்.

அதற்கு எடுத்துக்காட்டு உரங்களின் விலையை உயர்த்தியது ஆகும்.

திமுக எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும் ஆட்சியை பிடிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.