தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று சென்னையில் நடந்த அரசு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர். இதனையடுத்து அமித்ஷாவுடன் நடந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பின்போது பாஜகவுக்கு 40 முதல் 50 சட்டப்பேரவைத் தொகுதிகளை அமித்ஷா கேட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிமுக தரப்பில் 25 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் தமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து அகில இந்திய பாஜக மகளிரணி தலைவி வானதி ஸ்ரீனிவாசனிடன் நாகர்கோவிலில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன், “தமிழகத்தில் கூட்டணி முடிவு ஆகிவிட்டது. பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை மேலிடம்தான் முடிவு செய்யும். தேர்தலில் நான் போட்டியிடுவதையும் கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். தென்னிந்தியாவில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தெலங்கானாவில்கூட தற்போது டிஆர்எஸ், பாஜக என்ற நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், “பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விசாரணை முடிந்த பிறகும்கூட தண்டனை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. அவர்களுக்கு தண்டனை விரைவில் கிடைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் தண்டனை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை துரிதமாக இருக்க வேண்டும். ரஜினிகாந்த் சிறந்த நடிகர், நல்ல ஆன்மிகவாதி. அவர் அரசியலுக்கு வருவதை பாஜக வரவேற்கும்” என்று தெரிவித்தார்.