தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக, அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் தயாராகிவருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கடந்தத் தேர்தலில் போட்டியிட்டதைப் போல 41 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்று காத்திருக்கிறது. ஆனால், திமுக தரப்பில் அந்தக் கட்சிக்கு 25 தொகுதிகள் தரப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. திமுக கூட்டணியில் தொகுதிக்காகப் பேரம் பேசமாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் அழகிரியும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

 
 இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மணிசங்கர அய்யர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை கேட்கக்கூடிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. என்றாலும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் மு.க. ஸ்டாலின்தான் இதுகுறித்து முடிவு செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.