கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மின்வெட்டு எங்கும் இல்லை. இந்த விஷயத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது உண்மை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.  

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு பிரச்சினை இருக்கும் என்பது அனைத்து மக்களிடமும் ஒரு கருத்து நிலவுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது மின்வெட்டு பிரச்னை தொடங்கியிருக்கிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு பாராட்டு

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் மே 7 அன்று பொறுப்பேற்றார். அவர் முதல்வராகப் பொறுப்பேற்று மே 7-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் திமுக ஆட்சி எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக முதல் அரசியல்வாதியாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மின்வெட்டு எங்கும் இல்லை. இந்த விஷயத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது உண்மை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 

 நிறையும் இல்லை; குறையும் இல்லை

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு பிரச்சினை இருக்கும் என்பது அனைத்து மக்களிடமும் ஒரு கருத்து நிலவுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது மின்வெட்டு பிரச்னை தொடங்கியிருக்கிறது. கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில் நிறையும் இல்லை, குறையும் இல்லை. இன்னும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால், மின்வெட்டு, நீட், விலைவாசி உயர்வு, ஆளுநருக்கும் - ஆட்சியாளர்களுக்கும் இடையே போட்டி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என பல்வேறு புகார்களை அரசு மீது மக்கள் கூறி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. ஆட்சிக்கு வந்ததும் அவற்றை மறந்து விடுவதும் வாடிக்கையாகத் தொடர்கிறது.

கஷ்டத்தைப் புரிஞ்சுக்கோங்க

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான வழிகளை மத்திய, மாநில அரசுகள் சொல்லவில்லை. அதைச் சொல்லாமல் மத்திய, மாநில அரசுகள் ஒருவர் மீது ஒருவருக்கொருவர் குறை கூறி வருகிறார்கள். எனவே, மக்களின் கஷ்டத்தை புரிந்துகொள்ளும் அரசுகளாக இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கின்றன” என்று பிரேமலதா தெரிவித்தார்.