முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்திருந்தாலும் அவரது ஆட்சியில் நடைபெற்ற ஊழலின் காரணமாக சசிகலாவிடம் சிக்கிக் கொண்ட பல ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு பகுதிதான் வருமான வரித்துறையிடம் இன்றைக்கு சிக்கியிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


2016ம் ஆண்டு நவம்பர் 8 அன்று பணமதிப்பு இழப்பு நடவடிக்கை பாஜக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தக் காலக்கட்டங்களில் கணக்கில் காட்டப்படாத ஏறத்தாழ இரண்டாயிரம் கோடி ரூபாயை புதிய நோட்டுகளாக மாற்றுவதற்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா எடுத்துக் கொண்ட முயற்சிகள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளன. இந்த வகையில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் செல்லாத தொகையான ரூபாய் 1911.50 கோடி வழங்கப்பட்டுள்ளதை வருமான வரித்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது.


1991ல் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சொத்து மதிப்பு 2.01 கோடியாக இருந்தது, 1996ல் ரூபாய் 66.44 கோடியாக உயர்ந்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார். இதற்கு சசிகலா உடந்தையாக இருந்த குற்றத்தை செய்ததால், அவரும் தண்டிக்கப்பட்டார். ஆனால், அந்த வழக்கில் சம்பந்தப்படாத வகையில் ஏறத்தாழ 2000 கோடி ரூபாய் வருமான வரித்துறையின் சோதனையின் மூலம் தற்போது சிக்கியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை சசிகலாவின் கைக்கு எப்படி வந்தது? அன்றைய அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் மிகப்பெரிய பயனாளியாக சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் விளங்கினார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்திருந்தாலும் அவரது ஆட்சியில் நடைபெற்ற ஊழலின் காரணமாக சசிகலாவிடம் சிக்கிக் கொண்ட பல ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு பகுதிதான் வருமான வரித்துறையிடம் இன்றைக்கு சிக்கியிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தினால் பாதிக்கப்பட்டபோது, அதை முதலீடாக மாற்றி சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்குவதற்கு யார், யார் உதவியாக இருந்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது ஒரு மிகப்பெரிய கிரிமினல் ஊழல் குற்றம். இத்தகைய நடவடிக்கைகளில் இன்றைய அதிமுக ஆட்சியாளர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பதையும் எவரும் மறுக்க முடியாது. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். இன்றைய அதிமுகவோடு சசிகலாவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கலாம். ஆனால், அம்மாவின் பேரில் ஆட்சி நடத்துகிற அதிமுகவுக்கும் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று எவரும் கூற முடியாது. எனவே, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா சம்பந்தப்பட்டுள்ள இத்தகைய சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் மத்திய புலனாய்வுத்துறையின் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இதன்மூலம் கடந்தகால அதிமுக ஆட்சிகளில் நடந்துள்ள பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அம்பலமாவதற்கும், அதில் பயனடைந்தவர்கள் தண்டனைக்கு உட்படுவதற்கும் உரிய வாய்ப்பாக இந்த விசாரணை அமைய வேண்டும்.” என கே.எஸ்.அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.