குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வேளச்சேரி அலுவலகத்தில் கோலமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தார்.

No CAA, No NPR, No NRC மட்டுமின்றி, No மோடி என்றும் மக்கள் கோலம் போட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் வீடுகளில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிடப்பட்டது.வீட்டு வாசல்களில் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவிப்பது, தற்போது டிரெண்டாகி வரும் நிலையில், சென்னை, வேளச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருமாவளவன், கோலமிட்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

“NO C.A.A” என்னும் வாசகம் அடங்கிய வகையில், அவர் கோலமிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், '’முதன்முறையாக 25 நிமிடங்கள் நானே கோலமிட்டேன். பெண்களின் கஷ்டங்களை உணர்ந்தேன். அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே நானே கோலமிட்டேன். மார்கழி மாதம் முழுதும் வீட்டில் கோலம் இடும் பெண்கள் CAA எதிராக கோலமிட்டு நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .

தமிழகத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் தான் இருக்கிறோம், ஆனால் ஆளும் அதிமுக மட்டும் தான் மத்திய அரசுக்கு முட்டு கொடுத்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.