தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மியாட் மருத்துவமனையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா ‘’விஜயகாந்துக்கு லேசான வைரஸ் தொற்றுதான்.கடந்த வாரத்தில் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, லேசான தொற்று இருப்பது தெரியவந்தது. மூன்று நாளில் குணமடைந்து வீடு திரும்பிவிடுவார். விஜயகாந்த்துக்கு எப்படி தொற்று வந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. தவிர குடும்பத்தினர் வேறு யாருக்கும் தொற்று இல்லை’’ எனறு அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்தை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் இல்லமாக அரசு அறிவித்து, ஸ்டிக்கர் ஓட்டிவருவது மாநகராட்சியின் நடைமுறை. அதேபோல், விஜயகாந்த் வீட்டிற்கும் ஸ்டிக்கர் ஒட்டச்சென்ற அலுவலகர்களை அவர்களின் வேலையை செய்யவிடாமல் விரட்டி அடித்திருக்கிறார்கள் வீட்டில் இருந்தவர்கள். இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘’தேமுதிக எப்போதும் அரசின் விதிமுறைகள் பின்பற்றும். எங்கள் வீட்டில் அதிகம் பாதிப்பு இல்லை. பக்கத்து வீட்டில்தான் அதிகம் பாதிப்பு’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் நலம்பெற வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட அறிக்கையில், ‘’அன்புள்ள கேப்டன்! உங்கள் துணிச்சலும், ‘மதுரைக்காரன்’ என்று கருதும் மன உறுதியும், மருத்துவத்தின் உறுதுணையும் இந்த நோயிலிருந்தும் உங்களை மீட்டெடுக்கும்; வாழ்த்துகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.