உச்சநீதிமன்ற நீதிபதி முன்பு ராசா உட்பட திமுக தலைவர்கள் தங்களது சொத்து பட்டியலை ஒப்படைக்க தயாராக உள்ளார்களா என அதிமுக அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது 
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் டிசம்பர் 1ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  2ஜி ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்த கட்சி திமுக. மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரனைப்போல திமுக தலைவர் ஸ்டாலின் பேசிவருகிறார். விரைவில் 2ஜி வழக்கில் அவர் சிக்குவார் என விமர்சித்தார்.

இதனையடுத்து 2ஜி வழக்கில் சிக்கி சிறை சென்ற பின்னர் விடுதலையான திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா முதலமைச்சரின் விமர்சனத்திற்கு பதில் அளித்தார். அப்போது,  2ஜி குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன், கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா? அட்டர்னி ஜெனரல் உட்பட யாரை வேண்டுமென்றாலும் உடன் வைத்துக் கொள்ளட்டும், நான் தயாராக இருக்கிறேன் எனசவால் விடுத்தார். 

மேலும் எடப்பாடி பழனிச்சாமி மல்லாந்து உமிழிந்து மலத்தை தன் மீது கொட்டிக் கொண்டார் எனவும் கடுமையாக தாக்கினார். அதேபோல செல்வி ஜெயலலிதா அவர்களை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சட்டத்தை மீறி சட்டத்தை படுகொலை செய்த கொள்ளைக்காரி என குறிப்பிட்டுள்ளதாகவும் ராசா விமர்சித்தார். அவரின் இந்த விமர்சனம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சரை விவாதத்திற்கு அழைத்த ராசாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் செய்தியாளரை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் அக்கிரமமான ஒரு நடவடிக்கையை கையில் எடுத்து, தன்னுடைய கையாளாக இருக்கக்கூடிய ஊழலில் நாயகனா உள்ள ராசாவை வைத்தே முதலமைச்சர் எடப்பாடியாரையும் எங்கள் தலைவியையும் கேவலமாக விமர்சனம் செய்யக்கூடிய போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். 

உங்களுடன் விவாதம் செய்ய எடப்பாடியார் எதற்கு, ராசாவுடன் நேரடியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார், கட்சிக்கு வருவதற்கு முன் ஒரு TVS-50 கூட இல்லாத ராசாவுக்கு இன்று கோடிக்கணக்கில் சொத்து எப்படி வந்தது. ராசாவால் இன்று வெளிநாட்டு கார்களில்தான் எப்படி செல்ல முடிகிறது. அவர் மனசாட்சிப்படி சொல்லட்டும், சொத்துக்கள் ராசா உழைத்து சம்பாதித்த சொத்துக்களா? எப்படி வந்தது. ஒட்டு மொத்த ஊழல் பெருச்சாளியாக திகழ்கிறார் ராசா. நான் ஒன்றைக் கேட்கிறேன் உச்சநீதிமன்ற நீதிபதி முன்பு ராசாவும், திமுக தலைவர்களுப் தங்களது சொத்து பட்டியலை ஒப்படைக்க தயாராக உள்ளார்களா. நாங்கள் எங்களது சொத்து பட்டியலை வெளியிட தயாராக உள்ளோம் என அனல் பறக்க பேசினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக காங்கிரஸ்சுடன் கூட்டணி வைக்கலாமா. உங்களை ஜெயிலுக்கு அனுப்பிய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்கிறீர்களே.? திமுகவை பார்த்து கேட்கிறேன் உங்களுக்கு வெட்கமே இல்லையா?  கைது செய்து உள்ளே வைத்த காங்கிரசோடு கூட்டணி வைக்கலாமா என்று திமுகவினர் ஸ்டாலினை கேட்க வேண்டாமா? 

திருடனுக்கு திருடன் என்ற வகையில்தான் காங்கிரசோடு திமுக கூட்டணி வைத்துள்ளது. திமுகவின் மூத்த தலைவர்களான கே.என் நேரு, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு போன்ற திமுக தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து வாங்குகின்றனர். இது உங்களுக்கு கேவலமாக தெரியவில்லையா, உதயநிதி ஸ்டாலின் என்ன போராட்ட வீரரா, தமிழ்நாட்டுக்காக தமிழக மக்களுக்காக மொழிக்காக சிறை சென்றாரா.?  ஸ்டாலின் மகன் என்பதற்காக அவரது காலில் திமுக தலைவர்கள் விழலாமா. இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா. என திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.