குளோபல் ஹவுசிங் டெக்னாலஜி சேலஞ்ச்-இந்தியா என்ற திட்டத்தின் கீழ் ஆறு மாநிலங்களில் லைட் ஹவுஸ் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் லைட் ஹவுஸ் திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் திரிபுரா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற  நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் திட்டத்திற்கு பிரதமர் மோடி  இன்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 1,152 வீடுகள் கட்டப்படும் என்றும் அதற்காக 116 கோடியே 26 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அற்றிய உரை பின்வருமாறு:  தற்போது நாட்டின் மொத்த கவனமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தேவைகள் என்ன என்பதில் உள்ளது.  நகரத்தில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கும் நாடு முன்னுரிமை அளித்துள்ளது, வீடுகளின் விலை தற்போது அதிகமாகிவிட்டதால், ஏழை, நடுத்தர, சாமானிய மக்கள், சொந்தமாக வீடுகள் பெறுவது  கனவாகவே மாறியுள்ளது. வங்கிகளின் அதிக வட்டி விகிதம், கடன் பெறுவதில் சிக்கல் போன்ற பல்வேறு நெருக்கடிக்கு மக்கள் ஆளாவதால் சொந்த வீடு என்ற நம்பிக்கை அற்று போயுள்ளனர்.தற்போது ஏழைகளுக்கு வீடு வழங்குவதோடு, அதன் இணைப்பு திட்டமாக வீடுகளுக்கு, நீர், மின்சாரம், எரிவாயு, கழிப்பறை மற்றும் பிற தேவையான வசதிகளும் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. 

அரசு எடுத்துள்ள இந்த முயற்சி நகரங்களில் வாழும் நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் உள்ளன. நடுத்தர வர்க்கத்தினருக்கு அவர்களின் வீட்டிற்கு ஒரு நிலையான தொகை,  வீட்டுக் கடனுக்கான வட்டி தள்ளுபடி போன்ற திட்டங்களும் வழங்கப்படுகிறது. இந்த கொரோனா நெருக்கடியிலும் வீட்டு கடனுக்கான வட்டி தள்ளுபடி என்ற திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. தற்போது செயல்படுத்தப்படும் இந்த  வீடு கட்டும் திட்டம் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதன்மூலம் 21ஆம் நூற்றாண்டில் வீடுகளை கட்டும் புதிய மற்றும் மலிவான தொழில்நுட்பம் இந்தியாவிலேயே வரும் காலங்களில் உருவாக்கப்படும். பொறியாளர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் வீடுகள் அமைய உள்ளது. தொழில்நுட்பங்களை நாட்டு மக்களும் அறிந்து கொள்வது அவசியம். அதாவது,  லக்னோவில் கனடாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்த இருக்கிறோம். 

இதற்கு சிமெண்ட் கலவை அல்லது வண்ணப்பூச்சுகள் தேவையில்லை. ஏற்கனவே உருவாக்கப்பட்ட சுவர்களை வைத்து இது வடிவமைக்கப்படவுள்ளது. அதேபோல் அகர்தலாவில் எஃகு பிரேம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இது நியூசிலாந்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும். வீடுகள் பூகம்ப அபாயத்திலிருந்து தடுக்க இது பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ராஞ்சியில் ஜெர்மனியில் இருந்து உருவாக்கப்பட்ட 3d உற்பத்தி முறையை பயன்படுத்த இருக்கிறோம். இந்த தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு அறையும் தனித்தனியாக கட்டப்படும். பின்னர் முழு அமைப்பும் ஒரு தொகுதி போல சேர்க்கப்படும். இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இவ்வாறு மோடி கூறினார்.