நாகர்கோவில் மற்றும் ஓசூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. நாகர்கோவில், ஓசூரை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் சட்ட முன்வடிவை இன்று சட்டப்பேரவையில் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்ய உள்ளார். 

தமிழகத்தில் சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், நாகர்கோவில் மற்றும் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் 2019-20-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் சட்டப்பேரவையில் காரசாரமாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற இருக்கிறது.

 

இந்நிலையில் ஓசூர், நாகர்கோவிலை மாநகராட்சியாக அறிவிக்கக்கூடிய மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்யவுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் மேலும் புதிய 2 மாநகராட்சிகளை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்த சட்ட முன்வானது நாளை வாக்கெடுப்பு எடுத்து நிறைவேற்றப்படும். அதற்கு பின்பு அதிகாரப்பூர்வமாக ஓசூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய இரண்டும் மாநகராட்சிகளாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.  

2013-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சியாக தரம் உயர்த்தினார். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓசூர் மற்றும் நாகர்கோவிலை புதிய மாநகராட்சிகளாக அறிவிக்க உள்ளார். மேலும், நெகிழி தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கான சட்டமசோதாவும் இன்று சட்டப்பேரவையில் தாக்கலாகிறது.