23 ஆண்டுகளுக்கு பிறகு மேல்சபை எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்துகொள்வதற்காக நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ள  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா சிலையின் காலடியை விழுந்து வணங்கினார். 

நாடாளுமன்றத்திற்கு திமுகவின் தயவில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வைகோ ராஜ்ய சபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வதற்காக டெல்லி சென்ற அவர் நாடாளுமன்றத்திற்கு உள்ளே சென்ற போது அங்குள்ள அறிஞர் அண்ணா சிலையை பார்த்ததும் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து அண்ணா சிலையிம் காலடியை பிடித்து வணங்கினார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நான் முதன் முறையாக எம்.பி. ஆன போது நாடாளுமன்றத்தில் முரசொலிமாறன் என்னை ஆதரித்தார். அதன்பிறகு 3 முறை கருணாநிதி என்னை எம்.பி. ஆக்கினார். இப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை வலுக்கட்டாயமாக நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபா எம்.பி., ஆக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தற்போது தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கி இருக்கிறது. மேகதாது அணை வந்தால் தமிழ்நாட்டில் காவிரி பாழாகும். ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தமிழகம் மெதுவாக சகாரா பாலைவனமாகும்.

தமிழ்நாட்டில் அணு கழிவை கொட்டுவதன் மூலம் 100 அணுகுண்டுகள் வெடிக்கும் ஆபத்து ஏற்படும். நியூட்ரினோ திட்டத்தால் முல்லைப்பெரியார், இடுக்கி அணைகளுக்கு ஆபத்து ஏற்படும். இவை வந்தால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும்.

நீட் தேர்வை தொடர்ந்து மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்னும் அபாய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. எல்லா துறைகளிலும் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் மத சார்பின்மையை சீர் குலைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்கும் வரையில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று ராஜாஜி சொன்னார். தமிழ்மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும்.

நான் சட்ட நகலை கொழுத்தி சிறை சென்று இருக்கிறேன். பொடா சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டேன். நீண்ட இடை வெளிக்குப்பிறகு மீண்டும் எம்.பி.யாக டெல்லி செல்கிறேன். தற்போது நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருப்பவர்களுடன் எனக்கு பழக்கம் இல்லை. தமிழகத்தின் உரிமையை காப்பதற்கு குரல் கொடுப்பேன்’’ என அவர் தெரிவித்தார்.