தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு (என்.பி.ஆர்) எதிரான முடிவை கேரளா, மேற்குவங்க முதல்வர்கள் மறுபரிசீலனை செய்ய  வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் வரிந்துகட்டியுள்ளன. குறிப்பாக கேரளா, மேற்கு வங்க அரசுகள் என்.ஆர்.சிக்கு தங்கள் மாநிலங்களில் இடமில்லை அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் இதே பாணியில் அறிவித்துள்ளன. இந்நிலையில் தேசிய ம்மகள் தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.


 “தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி.) நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போது இல்லை.  என்ஆர்சி தொடர்பாக விவாதிக்க எந்தத் தேவையும் இல்லை என்று பிரதமர்  சரியாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திலும் சரி, அமைச்சரவையிலும் சரி, இது குறித்து விவாதம் எதுவும் தேவையில்லை. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் (என்.பி.ஆர்.) தேசிய குடிமக்கள்  பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
என்.பி.ஆர்க்கு எதிரான முடிவை கேரளா, மேற்குவங்க முதல்வர்கள் மறுபரிசீலனை செய்ய  வேண்டும். அரசியல் காரணங்களுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்காதீர்கள்” என்று அமித் ஷா தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பது வழக்கம். தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பை தங்கள் மாநிலத்தில் நிறுத்திவைப்போம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். அதே கருத்தை பினராயி விஜயனும்  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.