மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள கட்சிகள், முடிந்தால் இன்றேகூட ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 288 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. இதேபோல தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிராஸ் கூட்டணி 98 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜக - சிவசேனா கூட்டணி 161 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுழற்சி முறையில் முதல்வர் பதவி, 50 சதவீத அமைச்சர் இடங்கள் என சிவசேனா விதித்த நிபந்தனையால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிபந்தனைகளை பாஜக ஏற்காததால், கூட்டணி முறிந்தது.


இதனையடுத்து சிவசேனா தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. முந்தைய அரசின் பதவிக்காலம் முடிந்த நிலையில், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை அடுத்தடுத்து மகாராஷ்டிரா ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தார். அந்த அழைப்புக்கான காலக்கெடு முடிவதற்குள் மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியதால், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய பிரசு பிரகடனப்படுத்தியது.
ஆட்சி அமைக்க கால அவகாசம் வழங்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை மகாராஷ்டிராவில் பிறப்பித்ததற்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. மேலும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முயற்சிகளையும் அக்கட்சி மேற்கொண்டுள்ளது.

 
இந்நிலையில், மகாராஷ்டிரா நிலவரம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்துள்ளார். அதில், “தேர்தலுக்கு முன்பும் பிரசாரத்தின் போதும் நானும் பிரதமர் மோடியும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் என்றுதான் தொடர்ந்து கூறினோம். அப்போதெல்லாம் எந்த ஆட்சபனையையும் சிவசேனா சொல்லவில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகுதான் முதல்வர் பதவிக்கு கோரிக்கை வைத்தனர். மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது சரியான நடவடிக்கை. இதற்கு முன்பு வேறு எந்த மாநிலத்திலும் 18 நாட்கள் ஆட்சி அமைக்க கால அவகாசம் வழங்கப்படவில்லை.
சட்டசபையின் பதவிகாலம் முடிந்த பிறகே கட்சிகளை ஆட்சியமைக்க ஆளுந அழைப்பு விடுத்தார். ஆனால், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ப்ட எந்தக் கட்சியுமே ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள கட்சிகள் முடிந்தால் இன்றேகூட ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.” என்று அமித் ஷா தெரிவித்தார்.