கொரோனா பரிசோதனையில் தற்போது நெகடிவ் என வந்ததையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 21 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 43,379-க்கும் மேற்பட்ட மக்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சில மாநிலங்களில் முதல்வர்கள் கூட வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த 2ம் தேதி  வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது அவர் ட்விட்டர் பக்கத்தில், ``கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்பட்ட ஆரம்பகட்டத்திலேயே நான் பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனை முடிவு அறிக்கையின்படி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனது உடல்நிலை சீராக உள்ளது. எனினும், மருத்துவர்களின் ஆலோசனையின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். பாதிப்பு காரணமாக, கடந்த 5ம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூமி பூஜையிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் சிகிச்சைக்கு பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளதாக பாஜக எம்.பி மனோஜ் திவாரி ட்வீட் செய்துள்ளார். அமித்ஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இந்த செய்தி பாஜக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.