Hmmm to those who stop at 2G verdict

2ஜி வழக்கின் தீர்ப்பு, தி.மு.க. மீது நிரந்தர கறைபடிய வைத்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எண்ணியவர்களுக்கு சம்மட்டி அடியாக அமைந்துள்ளதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன. 

இவ்வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனாலும் மேல்முறையீடு செய்யப்படும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். 

இந்த தீர்ப்பு குறித்து தி.மு.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கை சட்டரீதியான போராட்டத்தில் வென்று நீதியின் முன் தனது களங்கமற்ற தன்மையை திமுக நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

தீர்ப்பு வெளியானதும் இந்திய அளவில் திமுக மீது சுமர்த்தப்பட்ட பெரும்பழி நீங்கிய மகிழ்ச்சி தொண்டர்கள் முகத்திலும், அகத்திலும் வெளிப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், வழக்கில், அரசியல் பின்னணி, சதிச்செயல்கள் இருப்பதை தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ள அம்சங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

திமுக எழுச்சியுடன் நடைபோடும் என்றும் எதிரிகளின் எண்ணம் தவிடுபொடியாகும் எனவும் தெரிவித்துள்ளார். 

வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பை வெற்றிக் கொண்டாட்டமாக தி.மு.க. முன்னெடுக்கும் என்றும் அடுத்தடுத்து வெற்றிகள் தொடரும் என்றும் கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.