Asianet News TamilAsianet News Tamil

அன்னதான திட்டத்திற்கு நிதி கொடுங்கள்... அறநிலையத்துறைக்கு ஆன்லைன் மூலம் நன்கொடை வழங்க ஏற்பாடு... விபரம் இதோ!

இந்நிலையில் அன்னதான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த நன்கொடை அளிக்கும் படி அறநிலையத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. 
 

Hindu Religious and Charitable Endowments Department request donation for annadhanam project
Author
Chennai, First Published May 29, 2021, 7:36 PM IST

தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோயில் அன்னதான திட்டம் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொட்டலங்கள், அரசு மருத்துவமனைகளில் உள்ள ஏழை எளிய நோயாளிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு  வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அன்னதான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த நன்கொடை அளிக்கும் படி அறநிலையத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. 

Hindu Religious and Charitable Endowments Department request donation for annadhanam project

ஆன்லைன் மூலமாக அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குவது தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றினால் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்குப் போராடி வரும் நிலையில், கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உதவியாளர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்கள் ஆகியோரதுப் பசியினைப் போக்கும் வகையில் திருக்கோயில்களிலிருந்து உணவுப் பொட்டலங்களை வழங்கிடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், திருக்கோயில்கள் வாயிலாக உணவு தயாரிக்கப்பட்டு பொட்டலங்களாக வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு மகத்தான வரவேற்பு கிட்டியுள்ளது.

Hindu Religious and Charitable Endowments Department request donation for annadhanam project

திருக்கோயில்கள் சார்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த உன்னதமான அன்னதானத்திட்டத்தினைத் தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட கூடுதல் நிதி தேவைப்படுவதால் அன்னதானத்திட்டத்திற்குத் தாராளமாக நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அன்னதானத்திற்கு நன்கொடை வழங்குதலை எளிமைப்படுத்தி இணையவழியாக செலுத்தும் வசதியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வசதி குறித்த விவரம் பின்வருமாறு,

Hindu Religious and Charitable Endowments Department request donation for annadhanam project

1. அன்னதானத்திட்டத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தை (hrce.tn.gov.in) பார்வையிட்டு அதன் முகப்பு பக்கத்தில் தோன்றும் "நன்கொடை" என்ற தலைப்பைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்தவுடன் பொது நன்கொடை, அன்னதானம் நன்கொடை மற்றும் திருப்பணி நன்கொடை என்ற மூன்று திட்டங்கள் இணையதளத்தில் தோன்றும்.

2. அன்னதான நன்கொடை செய்ய விரும்புவோர் "அன்னதானம் நன்கொடை" என்ற தலைப்பைத் தேர்வு செய்ய வேண்டும். தற்போது முதற்கட்டமாக 57 திருக்கோயில்களின் பெயர்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நன்கொடை செலுத்த விரும்புவோர் அத்திருக்கோயில்களில் எந்தத் திருக்கோயிலுக்குத் தாங்கள் நன்கொடை செலுத்த விரும்புகிறீர்களோ அந்த திருக்கோயிலைத் தேர்வு செய்ய வேண்டும்.

3. நன்கொடை செலுத்த விரும்புவோர் தங்களது பெயர், முகவரி, அஞ்சலகக்குறியீடு, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செலுத்த விரும்பும் தொகை ஆகியவற்றைக் கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும்.
 வருமானவரி விலக்குப் பெற விரும்பினால் தங்களது நிரந்தர கணக்கு எண்ணையும் (PAN) பதிவு செய்ய வேண்டும்.

4. மேற்கண்ட தகவல்களை உள்ளீடு செய்த பின் தாங்கள் அளித்த தகவல்களை மீண்டும் சரிபார்க்க ஏதுவாக தாங்கள் பதிவிட்ட தகவல்கள் திரையில் காண்பிக்கப்படும். சரியாக இருப்பின் கணினி வழியாக நிதி பரிவர்த்தனை செய்யலாம்.

5. நிதி பரிவர்த்தனை செய்ய விரும்புவோர் பற்று அட்டை (Debit Card), கடன் அட்டை (Credit Card) மற்றும் இணையவழி வங்கி சேவை (Internet Banking) வாயிலாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) கட்டண செலுத்து முறை (Payment Gateway) வழியாக நிதி பரிவர்த்தனை செய்யலாம். அவ்வாறு செலுத்தப்படும் நிதியானது, சம்மந்தப்பட்ட திருக்கோயில்களின் பெயரில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்கிற்கே நேரடியாகச் சென்று விடும்.

6. நிதி பரிவர்த்தனை செய்து முடித்தவுடன், பரிவர்த்தனை குறித்த ஓர் ஒப்புகை அட்டை (Acknowledgement) தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அந்த ஒப்புகை அட்டையில் நிதி பரிவர்த்தனை செய்த எண் (Transaction Number), நிதி பரிவர்த்தனை செய்த நாள் மற்றும் நேரம் (Transaction Date & Time), நிதி செலுத்தியவர்கள் பெயர், முகவரி, நிரந்தரக் கணக்கு எண் (PAN) மற்றும் பரிவர்த்தனை குறித்த இதர விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

7. அன்னதானம் திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைக்கு, இந்திய வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80ஜி-இன் கீழ் வரிவிலக்கும் உண்டு. எனவே, திருக்கோயில்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தைத் தொடர்ந்து தொய்வு ஏதுமின்றி செயல்படுத்த ஏதுவாக, தாராளமாக நன்கொடை வழங்குமாறு பொது மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios