Hindu-Muslim issue to convert the electricity issue? - Prime Minister Akhilesh attack on
உ.பி. மின்சார வினியோக விவகாரத்தை, பிரதமர் மோடி இந்து-முஸ்லிம் பிரச்சினையாக சித்தரிப்பது விந்தையாக உள்ளதாக, முதல்-அமைச்சர் அகிலேஷ் யாதவ் தாக்குதல் தொடுத்தார்.

உ.பி.யின் ஜான்பூர் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர் இது குறித்து கூறியதாவது-
விந்தை மனிதர்
‘‘நமது பிரதமர், மிகவும் விந்தையான மனிதர்..மின்சார வினியோகத்தை, இந்து-முஸ்லிம் பிரச்சினையாக அவர் முன்னிலைப்படுத்துகிறார்.
ரம்ஜான் பண்டிகைக்கு வினியோகம் செய்யப்பட்டதைப் போல் தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்லை என அவர் கூறுகிறார்.
பாரபட்சம் இல்லை
நாங்கள் உடனடியாக அது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டோம். அதன்மூலம் நாங்கள் எந்தவித பாரபட்சமும் காட்டவில்லை என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் தங்கி இருப்பது பிரதமருக்குப் பிடிக்காமல், உ.பி.யில் மேலும் தங்கி இருக்க அவர் விரும்பினால், டெல்லியில் இருந்து இடத்தை அவர் மாற்றிக்கொள்ளட்டும்.
சாலை பிரசாரம்
வாரணாசியில் ராகுலுடன் இணைந்து நாங்கள் நடத்திய சாலை பிரசாரம் வெற்றிகரமாக அமைந்தது. இதற்கு மக்கள் அளித்த ஆதரவின் மூலம் மக்கள் சமாஜ்வாதி பக்கம்தான் என்பது உறுதியாகிவிட்டது.
ராணுவத்தில் ‘ஒரு பதவி ஒரே பென்சன்’ விவகாரத்தில் பிரதமர் ஏமாற்றுகிறார். ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்ற ெபயரில் நமது ராணுவம் போருக்கு தள்ளப்பட்டு உள்ளது.
காஷ்மீர் நிலைமை குறித்து அனைவருக்கும் தெரியும்...இதுபோன்ற ஒரு பிரதமரை, முன்பு எப்போதும் நாம் பார்த்தது இல்லை. மக்கள் அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விவசாய கடன் தள்ளுபடி
கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை மோடி தவறாக வழி நடத்துகிறார். மத்தியப் பிரதேசம், சண்டிகார் மற்றும் ஜார்கண்டில் எவ்வளவு கடன் தள்ளபடி செய்யப்பட்டது என்பதை அறிவிக்க வேண்டும்.
உ.பி.யிலும் நாங்கள் விவசாயிகளின் கடன்களை தள்ளபடி செய்து இருக்கிறோம். தேவைப்பட்டால் ரூ.1 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்வோம்’’.
இவ்வாறு அவர் கூறினார்.
