இந்து முன்னணி  நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் நேற்று தனது 91ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த விழாவில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக., தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன்,  இயக்கத்தினர் உள்ளிட்ட பலர் நேரில் கல்ந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலனின் 91ஆவது பிறந்தநாள் விழா சுவர்ணாபிஷேக விழாவாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று கொண்டாடப் பட்டது. விழா மங்கள இசை வாத்தியத்துடன் துவங்கி, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. வீரமணி ராஜூ இசைக் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவாளர் தேச.மங்கையர்க்கரசியின் சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. 

இந்த விழாவில் கலந்து கொண்ட பலர், ராம.கோபாலனுக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதன் பின்னர் ராம.கோபாலன் பேசியபோது, “தனி மனிதப் புகழ்ச்சி என்பது, சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. தனி மனிதப் புகழ்ச்சி அந்த மனிதனுக்கும் சரி, சமுதாயத்துக்கும் சரி கேடு விளைவிக்கும். நல்ல மனிதன் சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும். இந்து மதத்தின் கோட்பாடு தர்மத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்பது.  எந்த ஒரு தனி நபரையும் மையப்படுத்தி மட்டும் நாம் செயலாற்றக் கூடாது. சமுதாயத்துக்காக மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும்” என்று  பேசினார். 

இந்த விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ராம.கோபாலனுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். பின்னர் அவர் பேசியபோது, ‘‘ராம கோபாலனின் கோட்பாடுகள்தான் என்னை முழு மனிதன் ஆக்கியது. அவருடன் ஆன்மிக சுற்றுப் பயணம் சென்றிருக்கிறேன். அப்போது நான் கற்ற அனுபவங்கள் பல. நல்ல ஆன்மிகத் தலைவர் என்றால் அது ராம.கோபாலனுக்கு முழுமையாகப் பொருந்தும்’’ என்றார்.