"ரஜினி வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" - டிஜிபி அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மனு
நடிகர் ரஜினிகாந்த்துக்கும், அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழக பொது செயலாளர் இராம.ரவிகுமார், சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நடிகரும், சிறந்த ஆன்மீகவாதியுமான ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல நற்பணிகள் செய்து வருகிறார். ஸ்ரீமஹான் ராகவேந்திரர், ஸ்ரீகணவதி சச்சிதானந்த சுவாமி, ஸ்ரீதயானந்த சரஸ்வதிசுவாமி போன்ற அருளாளர்களின் ஆசியோடு ஆன்மீக பணிகள், அறப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரோடும் நல்ல நட்புடன் வாழ்ந்து வந்தாலும், மனதில்பட்ட கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலோடு சொல்லி வந்தவர். வருபவர்.
நாடு முழுவதும் நதிகள் இணைக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்தவர். பாரத பிரதமர் நரேந்திர மோடி கள்ள பணம் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தந்தவர். இவரது ஆதரவு எதிர்ப்பு நிலை தமிழக அரசியலில் பல்வேறு காலகட்டத்தில் அரசு மாற்றங்களை உண்டாக்கி உள்ளது.
சமீப காலமாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள், தேச நலன் விரும்பிகளிடம் கருத்து கேட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால் இவரது அரசியல் வருகை சம்பந்தமாக தமிழக அரசியல் தலைவர்கள், பெருமக்கள் ஆதரவு எதிர்ப்பு நிலை கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தங்களது நிலை காணாமல் போய்விடுமோ என அஞ்சி மிரட்டல் விடுக்கும் வகையில், ரஜினிகாந்த்துக்கு அச்சுறுத்தும் நோக்கில் போராட்டம், ஆர்ப்பாட்டம், வெடிகுண்டு, கொடும்பாவி எரிப்பு என தமிழகத்தில் வீண் பதற்றத்தையும், சட்டம் ஒழுங்கையும் சீர் கெடுக்கும் வகையில் பேசியும், செயலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். வெறுப்பு அரசியல் மூலம் ஜனநாயக விரோதமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த சூழலில் ரஜினிகாந்த்துக்கு உரிய பாதுகாப்பும், வீடு, அலுவலகம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி தமிழகத்தை வன்முறை களமாக்க துடிக்கும் கும்பல்கள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.