Hijab row: வகுப்பறையில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்க கோரி பி.யு. கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் தாக்கல் செய்த மனுவை மார்ச் 15 ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து இருக்கிறது.
"கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லீம்களுக்கு எதிரான பாகுபாடு காட்டும் வகையில் உள்ளது. இதன் காரணமாக முஸ்லீம் பெண்களின் கல்வி உரிமை நிராகரிக்கப்பட்டு விடும் அபாயம் எழுந்துள்ளது," என அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்து உள்ளது.

ஹிஜாப் தடை:
"ஹனாஃபி, மலிகி, ஷாஃபாய் மற்றும் ஹம்பிலி என அனைத்து விதமான பள்ளிகளிலும் மத அறிஞர்கள் இடையே ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கருத்து ஒற்றுமை இருந்து வருகிறது. இதனை பின்பற்றாதவர்கள் பாவம் செய்தவர் ஆகி விடுவர்," என முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் மேலும் தெரிவித்தது.
வகுப்பறையில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்க கோரி பி.யு. கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் தாக்கல் செய்த மனுவை மார்ச் 15 ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் முஸ்லீம் மத நம்பிக்கையின் படி ஹிஜாப் அணுவது கட்டாயம் இல்லை என்றும் தீர்ப்பில் தெரிவித்து இருந்தது. இதனால் கர்நாடக மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடர்கிறது.

அவசர வழக்கு:
கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக குந்தபுராவை சேர்ந்த பு.யு. கல்லூரி மாணவி ஆயிஷா சையபத் உத்த நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மேலும் மனுவை விரைந்து விசாரிக்கவும் மாணவி கோரிக்கை விடுத்து இருந்தார். இவரது மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டார்.
இதை அடுத்து மார்ச் 28 ஆம் தேதி பி.யு. கல்லூரி தேர்வுகள் தொடங்க இருப்பதால், அதற்கு முன் மனுவை விசாரிக்க வழக்கறிஞர் காமத் கோரிக்கை விடுத்தார். தேர்வுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை, தேர்வுக்காக வழக்கை அவசரமாக விசாரணை செய்ய முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மேல்முறையீடு:
கர்நாடகா மாநிலத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கின. இதையொட்டி மாணவர்கள் ஈகோவை விட்டு விட்டு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என அம்மாநில கல்வி துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்தார். இத்துடன் ஹிஜாப் அணிந்து வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தான் அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்து உள்ளது. இந்த மனு எப்போது விசாரணைக்கு வரும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
