இபிஎஸ்-ஐ கண்டித்து ஓபிஎஸ் அணி இன்று ஆர்ப்பாட்டம்... நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது மதுரைக்கிளை!!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஓபிஎஸ் அணியின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஓபிஎஸ் அணியின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையில் இன்று (11.03.2023) எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி இன்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் அதிமுகவில் ஒன்றிணைப்பை வலியுறுத்தியும், இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க சிவகங்கை டிஎஸ்பிக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: உதகையில் ஆளுநர் ரவிக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், எடப்பாடி பழனிச்சாமி வருகையை கண்டித்து ஓபிஎஸ் அணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டள்ளது. இந்த சூழலில் இபிஎஸ் அணியின் பொதுக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் ஓபிஎஸ் அணியின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று வாதிட்டார். ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.செல்லப்பாண்டியன், ஓபிஎஸ் அணிக்கு ஆட்சியர் அலுவலகம் அல்லது சந்திரா பூங்கா அருகே காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளோம்.
இதையும் படிங்க: எனக்கு காங். சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் விருப்பமில்லை... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி!!
நாங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய இடமும், இபிஎஸ் அணி பொதுக்கூட்டம் நடைபெறும் இடமும் வேறு. இதனால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, மனுதாரரிடம் ஆர்ப்பாட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது என உறுதிமொழி பத்திரம் வாங்கிக்கொண்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.