முரசொலி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையம் விசாரிப்பதற்கு அதிகாரம் இல்லை எனவும், ஆணையம் விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு முறையீடு செய்தார்.

இந்த வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஒப்புக்கொண்டார். அதன்படி விசாரணைக்கு வந்த வழக்கில் திமுக தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்ட நீதிபதி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முரசொலி நிர்வாக அறங்காவலர் மு.க.ஸ்டாலின் ஆஜராக தேவை இல்லை. பஞ்சமி நிலம் இல்லை என்பதற்கு ஆதாரமாக என்ன ஆவணங்கள் உள்ளது என்பதற்கான பட்டியலை மட்டும் வழங்க வேண்டும்’’என உத்தரவிட்டார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் அரசியல் ரீதியாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு வந்தபின்னர், இந்த விவகாரத்தை அவர் விசாரிப்பதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். துணைத் தலைவர் முருகனுக்கு மாற்றாக வேறு யாரும் விசாரிக்க முடியுமா என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பதிலளிக்க வேண்டும். ஆணையத்தின் விசாரணை வரம்பு குறித்தும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

புகார்தாரர் சீனிவாசன் இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு குறித்து அவரது நிலைப்பாட்டையும் தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.