high court opinion about vairamuthu speech about andaal
ஆண்டாள் குறித்து ஆய்வு கட்டுரையை மேற்கோள் காட்டி வைரமுத்து பேசியதில் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பேசிய வைரமுத்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து அமைப்பினர், ஸ்ரீவில்லிபுத்தூருக்கே வந்து வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவை இழிவாக விமர்சித்தார். வைரமுத்துவின் நாக்கை அறுத்து வருபவருக்கு பரிசுத்தொகை தருவதாக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வைரமுத்துவிற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இயக்குநர் பாரதிராஜா, சீமான் ஆகியோர் ஆதரவு அளித்தனர்.
இதற்கிடையே ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக வைரமுத்து மீது சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆய்வுக்கட்டுரையை மேற்கோள் காட்டியே தான் பேசியதாகவும் தன்மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி வைரமுத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.ரமேஷ், ஆண்டாள் குறித்து வைரமுத்து தனிப்பட்ட கருத்தை கூறவில்லை. ஆய்வுக்கட்டுரையை மேற்கோள் காட்டியே அந்த கருத்தை தெரிவித்துள்ளார். எனவே வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆலோசிக்க அரசு வழக்கறிஞர் அவகாசம் கோரியதால், இந்த வழக்கின் விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
