பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரிய மனு மீது, சென்னை காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, அங்கு வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலை அகற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இன்று லெனின் சிலை, நாளை பெரியார் சிலை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் சில இடங்களில் இருந்த பெரியார் சிலை பாஜகவினரால் சேதப்படுத்தப்பட்டது. அதே வேளையில், நடந்து சென்ற பிராமணர்கள் அணிந்திருந்த பூணூலை சிலர் அறுத்தெறிந்தனர். 

கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்துகள் பேசியதாக கூறப்பட்டபோது, ஹெச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் சில கருத்துக்களைக் கூறி வந்தார். இந்த நிலையில்தான், பெரியார் சிலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஹெச்.ராஜா மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரிய மனு மீது சென்னை காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரிய புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வலியுறுத்தும் மனு மீது சென்னை காவல்துறை விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் ஹெச்.ராஜா பேசி வருவதால், பொது அமைதிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  மனு தாக்கல் செய்துள்ளார்.

ஹெச்.ராஜாவை கைது செய்து உரிய மனநல மருத்துவரின் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கோரி மார்ச் 7ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் மற்றும் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த
உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், சம்மந்தப்பட்ட காவல் துறையினரிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 28 ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.