சென்னை முழுவதும் பல இடங்களில் உள்ள பேனர்களை அகற்றாமல் காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என கோபத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சாலைகள், நடைபாதைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கக்கூடாது, சம்மந்தப்பட்ட விழா முடிந்தவுடன் உடனடியாக பேனர்களை அகற்றிவிட வேண்டும் என பேனர்கள் தொடர்பாக பல்வேறு அதிரடியான உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

ஆனால் அவை எதையும் அரசோ, காவல்துறையோ, உள்ளாட்சி நிர்வாகங்களோ முறையாக பின்பற்றுவதாக தெரியவில்லை. இந்நிலையில், பேனர்களுக்கு எதிராக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த பல்வேறு வழக்குகளை தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விசாரித்தார்.

அப்போது, பேனர்கள் தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் காவல்துறை பின்பற்றுவதாக தெரியவில்லை. சென்னை கிரீன்வேஸ் சாலையிலிருந்து உயர்நீதிமன்றம் வரையில் மட்டும்தான் பேனர்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. ஆனால் மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் பேனர்கள் அகற்றப்படுவதில்லை. அவற்றையெல்லாம் காவல்துறை ஏன் அகற்றவில்லை? என மிகக் கடுமையாக கோபத்துடன் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நாளை பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.