நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் கடற்கரை சாலையில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழியில் கருப்புக்கொடி , பொதுமக்கள் , கட்சித்தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


சென்னை சட்டசபை அமைந்துள்ள கடற்கரை காமராஜர் சாலை இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை ஒட்டி முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கூவத்தூரிலிருந்து வரும் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் காமராஜர் சாலையில் இணைந்து தலைமை செயலகம் நோக்கி வரவேண்டும் என்பதால் வழியில் அவர்களுக்கு அதிமுக எதிர்ப்பாளர்களால் வழியில் மடக்கப்படலாம் என்பதால் ஒவ்வொருவரும் அமைச்சர்களின் காரில் வருகின்றனர்.


அவ்வாறு வரும் கார்கள் அடையாறு சத்யா ஸ்டுடியோ வழியாக திரும்பி காமராஜர் சாலை வழியாக சாந்தோம் , ஆல் இந்தியா ரேடியோ , காந்தி சிலை , கண்ணகி சிலை , எழிலகம், அண்ணா சமாதி , போர் நினைவுசின்னம் வழியாக தலைமை செயலகம் செல்ல உள்ளது.


இதனால் வழியில் எதுவும் நடந்துவிட கூடாது என்பதற்காக கடற்கரை சாலை முழுவதும் சாலைத்தடுப்புகளை வைத்து போலீசார் பிரித்துள்ளனர். சாலையில் வரிசையாக தடுப்பை போட்டு ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் போடப்பட்டுள்ளது.


தலைமை செயலகமும் கடும் போலீஸ் பாதுகாப்பில் உள்ளது. ஆயிரம் போலீசார் தலைமை செயலகத்தில் குவிக்கப்பட்டு ,அனைவரையும் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்புகின்றனர்.