கொரோனா வைரஸ் நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் 40 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி தயாராக உள்ளது எனவும், அதற்கான மூன்றாம் கட்ட சோதனையில் சுமார் 1600 பேர் இணைந்துள்ளதாகவும்  சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் முன்பை விட சற்று குறைந்துள்ள போதும் அது இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. தற்போது தினசரி சுமார் 50,000 பேர் அதில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அதில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது கொரோனா நோய் தொற்றுகளை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  86,83, 917 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 47,905 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சுமார் 550 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.28,121 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவிலிருந்து நேற்று ஒரு நாளில் மட்டும் 52,718 பேர் குணமடைந்துள்ளனர். இருந்தாலும் முழுவதுமாக இந்த வைரஸில் இருந்து மீண்டுவர பிரத்தியேக தடுப்பூசியை எதிர் நோக்கி உலக நாடுகள் காத்திருக்கின்றன. அதற்கான முயற்சியில் இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. 

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியை சீரம்  நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை இந்திய நிறுவனமான சீரம் தயாரித்து வரும் நிலையில் இதுவரை சுமார் 4 கோடி டோஸ் அளவுக்கு கோவிஷீல்ட்  தயாரிக்கப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. அதன் மூன்றாம் மற்றும் இறுதி கட்ட சோதனைக்கு மொத்தம் 1600 பேர் பதிவு செய்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. இதற்கான சோதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) மேற்பார்வையில் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது. 

கோவாவாக்ஸ் தடுப்பூசிக்காக அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸுடன் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 100 கோடி அளவு டோஸ் தடுப்பூசி வழங்க நோவாவக்ஸ் எஸ்ஐஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.