இந்தியாவில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கூட குறையவில்லை. மாறாக தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்துவருகிறது. இந்தியாவில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3676 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கில் நிறைய தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஒருசிலவற்றை தவிர கிட்டத்தட்ட அனைத்து தொழில்களும் கடைகளும் இயங்க தொடங்கிவிட்டன. 

மத்திய அரசு ஊரடங்கை செயல்படுத்திய விதம், புலம்பெயர் தொழிலாளர்களை கையாளும் விதம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகின்றன. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்துகொண்டார். அப்போது, சோனியா காந்தியிடம், மத்திய அரசு கொரோனா ஏற்படுத்திய நெருக்கடியான சூழலை கையாண்ட விதத்தை கடுமையாக விமர்சித்ததுடன், மத்திய அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டினார். 

மத்திய அரசின் இடைக்கால முடிவெடுக்கும் முறை கண்டிப்பாக நிறைய பிரச்சனைகளை உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், சில கோரிக்கைகளையும் முன்வைத்தார். 

1. ஏழை, எளிய மக்களுக்கு, குறிப்பாக வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்பவர்களுக்கு நேரடியாக பொருளாதார நிவாரணம் வழங்க வேண்டும். திமுகவும் காங்கிரஸும் வலியுறுத்தியபடி, மக்களுக்கு நேரடியாக பணம் வழங்க வேண்டும்.

2. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை நாட்களை 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்த வேண்டும்.

3. விவசாயிகள் மற்றும் சிறு தொழில்நிறுவனங்களின் வங்கிக்கடனை ரத்து செய்ய வேண்டும்.

ஸ்டாலின் இந்த கோரிக்கைகளையெல்லாம் முன்வைத்தார். சோனியா காந்தி, எதிர்க்கட்சிகளுடன் நடத்திய ஆலோசனைகளில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி, நிறைவேற்ற வலியுறுத்துவார்.