குஷ்புவை அடுத்து முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் பாஜகவில் தனது கட்சியை இணைக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அடுத்து பாஜகவில் இணைய உள்ளதாக நம்பகமான ஒரு லிஸ்ட் உலா வருகிறது. 

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் நடிகை குஷ்பு, மதன் ரவிச்சந்திரன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். அடுத்து நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ.,வும் தமது ஒரே ஒரு கோரிக்கையை நிறைவேற்றினால் தமது கட்சியை பாஜகவுடன் இணைக்க தயார் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாஜகவில் திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் விஷால் அந்த லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார். அடுத்து விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி இணைய உள்ளதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம் காங்கிரஸை விட்டுக்கொடுக்காமல் பேசும் விஜயதாரணி, இப்போது பாஜகவின் திட்டங்களை ஆதரிக்கும் மன நிலையில் பேசு வருவதும் ஒரு காரணம் என்கிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தம்மை கண்டுகொள்வதில்லை என்கிற விரக்தியும் பாஜகவில் அவர் இணைய ஒரு காரணம் எனக்கூறப்படுகிறது. 

அடுத்து அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சரும், தற்போதைய தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வுமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் இந்த லிஸ்டில் இருப்பதாக கூறுகிறார்கள். இது தொடர்பாக பாஜக தலைவர்களை அவர் சந்தித்து பேசியதாக வந்த தகவலை அவர் மறுத்து வந்தார். ’சமூக ஊடகங்களில் தகவல் என்னையும் தளபதியும் பிரிக்க முடியாது’என அவர் கூறி வந்தார். 

குஷ்புவும் கூட கடைசி நாள் வரை தான் பாஜகவில் இணையவில்லை. ஒரு போஸ்டுக்கு ரூ.2 வாங்கிக் கொண்டு புரளி பரப்புகிறார்கள் எனக் கூறி வந்தார். பின்னர் பாஜகவில் இணைந்தார். ஆகவே, இந்த லிஸ்டிலுள்ளவர்கள் மறுத்தாலும், விரைவில் அவர்கள் பாஜகவில் இணைகிறார்களா? என்பது வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.