மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். காரில் செல்பவர்கள் ‘சீட் பெல்ட்’ கண்டிப்பாக அணியவேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்டத்தை தீவிரமாக தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் கண்டிப்பாக அணியவேண்டும் என்ற உத்தரவை தீவிரமாக அமல்படுத்த தமிழக போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும், மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான விவரங்கள் எதுவும் இல்லை.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து சென்றாலும், அவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும்’ என்று கூறினர். அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வக்கீல், ‘இதை படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’ என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று மீண்டும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று முதல் தமிழகம் எங்கும் பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டு என்ற நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது.